மறக்க முடியாததாக மாறிய சசி தரூரின் ‘மறக்கமுடியாத நினைவுகள்’ பதிவு

மறக்க முடியாததாக மாறிய சசி தரூரின் ‘மறக்கமுடியாத நினைவுகள்’ பதிவு
நிலச்சரிவு பாதித்த வயநாடுக்கு சென்றதை "மறக்கமுடியாதது" என்று வர்ணித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூருக்கு சமூக வலைதளங்களில் பதிலடி

திருவனந்தபுரத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசி தரூர் கேரளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக வயநாட்டுக்கு சென்றிருந்தார். நிவாரணப் பொருள்களாக பாய், தலையணை மற்றும் போர்வை முதலானவற்றை வழங்கியிருந்தார்.

தரூர் வயநாட்டில் பேரழிவிற்குள்ளான பகுதிகளுக்கு தனது விஜயத்தை "உணர்ச்சி ரீதியானது" என்று விவரித்தார். "சூரல்மலை, முண்டக்கை மற்றும் புஞ்சரிமட்டம் கிராமங்களில் நடந்த அழிவைப் பார்க்க இடிபாடுகளுக்குள் நான் வழியைத் தேர்ந்தெடுத்தேன். அதிகாலை 2 மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு குடும்பங்கள் நிம்மதியாக உறங்கும் போது, உணர்ச்சிப்பூர்வமாக பேரழிவை ஏற்படுத்தியது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். பாறைகள் மற்றும் மண் அவர்கள் மீது மோதி, அவர்களின் வீடுகளையும் அவர்களின் கனவுகளையும் நசுக்கியது" என்று அவர் எழுதினார்.

இந்நிலையில், வயநாட்டிற்கு சென்றது முதல் பாதிப்படைந்தவர்களைச் சந்தித்தது வரையில் விடியோ எடுத்து, தனது எக்ஸ் பக்கத்தில் `வயநாட்டில் மறக்கமுடியாத நாளின் சில நினைவுகள்’ என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தார் சசி தரூர்.

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காணாமல் போன பகுதிகளை காங்கிரஸ் எம்பி பார்வையிட்டார். சமூக ஊடகங்களில் அவர் பகிர்ந்துள்ள காணொளி, பேரிடரில் வீடுகளை இழந்து தற்போது நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு அவரது அலுவலகம் ஏற்பாடு செய்த நிவாரணப் பொருட்களை இறக்குவதற்கு அவர் உதவுவதைக் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்தும் அவர் சந்தித்துப் பேசுகிறார்.

இதனையடுத்து, சசி தரூரின் எக்ஸ் பதிவுக்கு பலரும் கலவையான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சசி தரூரின் பதிவைக் கண்டித்த எக்ஸ் தளப் பயனர் ஒருவர், ``உயிரிழப்புகளும் சோகங்களும் நிலவுகிற பகுதியில், மறக்கமுடியாத நினைவுகள் என்று குறிப்பிடுவது கண்டிக்கத்தக்கது’’ என்று தெரிவித்திருந்தார்.

மற்றொருவர், ``சோகத்தால் பாதிக்கப்பட்ட வயநாட்டிற்கு ஒரு மறக்கமுடியாத நாளைக் கொண்டாடச் சென்றாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வேறொரு பயனர், ``உண்மையில் உதவுவதைவிட அதைப் பற்றி இடுகையிடுவதுதான் மிகவும் முக்கியமானது. தன்னலமற்ற சேவையை விட செல்ஃபிக்களுக்குதான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய எக்ஸ் பதிவு சர்ச்சையானதையடுத்து, சசி தரூர் ``மறக்கமுடியாதது என்பது நினைவில் கொள்ளத்தக்கது அல்லது நினைவில் கொள்ளக்கூடிய ஒன்று என்ற பொருளில்தான் சொன்னேன்" என்று பதிலளித்தார்.

Tags

Next Story