விண்வெளிப் பாதையில் இந்தியா உயர்நிலைக்கு செல்லும்: இஸ்ரோவின் தலைவரிடம் ஜிதேந்திரசிங் உறுதி

விண்வெளிப் பாதையில் இந்தியா உயர்நிலைக்கு செல்லும்: இஸ்ரோவின் தலைவரிடம் ஜிதேந்திரசிங் உறுதி
X

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் - இஸ்ரோவின் புதிய தலைவர் டாக்டர் எஸ்.சோமநாத் சந்திப்பு

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கை இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் சந்தித்து “ககன்யான்” நிலைமை, எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்து விவாதித்தார்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – இஸ்ரோவின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் எஸ்.சோமநாத், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை சந்தித்து "ககன்யான்" நிலைமை மற்றும் இதர எதிர்கால விண்வெளித் திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

இஸ்ரோவின் புதிய தலைவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்த அமைச்சர், "ககன்யான்" எனும் விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் இந்தியாவின் முதலாவது திட்டம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சில திட்டங்களுக்கு தலைமை ஏற்கும் சிறந்த தருணத்தில் கவுரவம் மிக்க பதவியைப் பெற்றிருப்பதாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் விண்வெளித் திட்டங்களுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விண்வெளி தொழில்நுட்பம் இப்போது பயன்படுத்தப்படுவதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். அடுத்த சில ஆண்டுகளில் விண்வெளிப் பாதை வழியாக இந்தியா உயர்நிலைக்கு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிட் தொற்று காரணமாக விண்வெளித் திட்டங்கள் தாமதமடைந்தன என்றும், இப்போது நிலைமை மீண்டும் சரியாகி இருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் அமைச்சரிடம் தெரிவித்தார். மனிதர் இல்லாத விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப்படுவதற்கு அனைத்து நடைமுறைகளும் தேவைப்படுகின்றன என்றும், மனிதர் இல்லாத முதலாவது பயணத்தைத் தொடர்ந்து "வியோ மித்ரா" எனும் இரண்டாவது பயணம் இருக்கும் என்றும் இது ரோபோவை சுமந்து செல்லும் என்றும் பின்னர் மனிதருடன் பயணம் இருக்கும் என்றும் சோமநாத் கூறினார்.

அடுத்த 3 மாதங்களில் விண்வெளிப் பயணத்திட்டங்கள் குறித்து இஸ்ரோ தலைவர் விவரித்தார். ரிக்காட் – 1ஏ பிஎஸ்எல்வி சி5 – 2 2022 பிப்ரவரியிலும், ஓஷன்சாட் – 3 ஐஎன்எஸ் 2பி ஆனந்த் பிஎஸ்எல்வி சி53 2022 மார்ச் மாதத்திலும் எஸ்எஸ்எல்வி – டி1 மைக்ரோசாட் 2022 ஏப்ரலிலும் செலுத்தப்பட இருப்பதாக அவர் கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!