24வது தலைமை தேர்தல் ஆணையராக திரு சுஷில் சந்திரா பொறுப்பேற்பு

24வது தலைமை தேர்தல் ஆணையராக திரு சுஷில் சந்திரா பொறுப்பேற்பு
X

நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக திரு சுஷில் சந்திரா இன்று பொறுப்பேற்றார். இப்பதவியில் இருந்த திரு சுனில் அரோரா, 2021 ஏப்ரல் 12ம் தேதியுடன் தனது பணிக் காலத்தை நிறைவு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தில், தேர்தல் ஆணையராக கடந்த 2019 பிப்ரவரி 15ம் தேதி முதல் திரு சுஷில் சந்திரா பணியாற்றி வந்தார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச வரம்பு நிர்ணய ஆணையத்தில் கடந்த பிப்ரவரி 18ம் தேதி முதல் இவர் உறுப்பினராக இருந்து வருகிறார். வருமானவரித்துறையில் சுமார் 39 ஆண்டுகளாக, பல பதவிகளை திரு சுஷில் சுந்திரா வகித்துள்ளார். 2016 நவம்பர் 1ம் தேதி முதல் 2019 பிப்ரவரி 14ம் தேதி வரை நேரடி வரி வாரியத்தின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார்.

நேரடி வரி வாரிய தலைவராக இருந்ததால், சட்டப்பேரவை தேர்தல்களின் போது பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத பணத்தை கண்டறிவதில் திரு சுஷில் சந்திரா முக்கிய பங்காற்றினார். இவரது தொடர் கண்காணிப்பால் சமீபத்திய தேர்தல்களில் பணம், மது, இலவச பொருட்கள், போதைப் பொருட்களின் பறிமுதல் கணிசமாக அதிகரித்தது. தூண்டுதல் இல்லாத தேர்தலை இவர் தொடர்ச்சியாக வலியுறுத்தினார்.

வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை சரிபார்ப்பதில் திரு சுஷில் சந்திரா சிறப்பு கவனம் செலுத்தினார். வேட்பாளர்கள் வேட்பு மனுவில் குறிப்பிடாத சொத்துக்கள் மற்றும் கடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் ஒரே மாதிரியான முறையை கொண்டுவந்ததில், திரு சுஷில் சந்திரா முக்கிய பங்காற்றினார். 2019ம் ஆண்டு நடந்த 17வது மக்களவை தேர்தல் மற்றும் இதர மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் புதுமையான தகவல் தொழில்நுட்ப விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் வசதியை கொண்டு வந்தததில் திரு சுஷில் சந்திராவின் பங்களிப்பு தனிச்சிறப்பானது.

கொவிட் சூழலில் பீகார், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது, மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வசதியை நீட்டித்தது, கொவிட் நோயாளிகள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தியது ஆகியவற்றில் திரு சுஷில் சந்திரா முன்னணியில் செயல்பட்டார்.

தேர்தல் ஆணையத்தில் 43 மாதங்கள் பணியாற்றி, பதவிக் காலத்தை நிறைவு செய்த தலைமை தேர்தல் ஆணையர் திரு சுனில் அரோராவுக்கு, தேர்தல் ஆணையம் ஏப்ரல் 12ம் தேதி பிரியாவிடை அளித்தது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!