டெல்லி மேயர் பதவியை கைப்பற்றிய ஆம் ஆத்மி: ஷெல்லி ஒபராய் புதிய மேயர்

டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த டிசம்பா் 4-ம் தேதி நடைபெற்றது. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 134 இடங்களைக் கைப்பற்றியது. 250 உறுப்பினா்களைக் கொண்ட மாநகராட்சி தோ்தலில் பா.ஜ.க. 104 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வென்றது.
இதையடுத்து கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பின் மேயர் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. மேயர், துணை மேயர் பதவிகளுக்கு ஆம் ஆத்மி மற்றும் பாஜக இரு தரப்பும் வேட்பாளர்களை அறிவித்தது.
முன்னதாக டெல்லி மாநகராட்சித் தேர்தலில் நியமன கவுன்சிலர்களும் வாக்களிப்பார்கள் என. டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா தலைமையில் புதிய விதிமுறை கொண்டு வந்ததுடன், 10 நியமன கவுன்சிலர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த நியமன கவுன்சிலர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.
ஆனால், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் ஆளுநரால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் விவகாரம் புயலை கிளப்பியது.
ஆளுநரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளதா என்பது தொடர்பாக ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. ஆத் ஆத்மி கட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது முதல், பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கவுன்சிலர்கள் மத்தியில் நடைபெற்ற அமளி காரணமாக டெல்லி மேயர் தேர்தல் முன்னதாக மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றபோதும் கூட, பாஜக தலைவரை மேயர் பதவிக்கு தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநகராட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது.
பின்னர், மேயர் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் ஷெல்லி ஓபராய் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேயர் தேர்தலில் நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது என்று உத்தரவிட்டது. இதையடுத்து மேயர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 22ம் தேதி மேயர் தேர்தல் நடத்தும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான மாநில அரசு அளித்த பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் டெல்லி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 266 வாக்குகள் பதிவாகின. இதில், 150 வாக்குகள் பெற்று ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒபராய் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரேகா குப்தா 116 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
டெல்லி மேயர் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் ஷெல்லி ஒபராய்க்கு அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 15 ஆண்டுகளாக பாஜக வசமிருந்த டெல்லி மேயர் பதவி தற்போது ஆம் ஆத்மி வசம் சென்றுள்ளது. மேலும் 10 ஆண்டுகளுக்குப் பின் பெண் மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய மேயராகத் தேர்வான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷெல்லி ஓபராய், தனது பதவிக்காலத்தில் கட்சியின் சித்தாந்தத்தை கடைபிடிப்பேன் என உறுதியளித்தார். மேலும் கெஜ்ரிவாலின் 10 உத்தரவாதங்களை முதல் நாளிலிருந்து கடைபிடித்து, டெல்லியை குப்பையில்லா நகரமாக மாற்றும் பணியைத் தொடங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu