நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு: புதிய விதிமுறைகள் அமல்

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு: புதிய விதிமுறைகள் அமல்
X

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது 

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் புதன்கிழமை பார்வையாளா்கள் மாடத்தில் இருந்த இரண்டு இளைஞா்கள் உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் குதித்து புகைக் குப்பிகளை வீசி தாக்குதல் நடத்தினா். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் இதேபோன்று புகைக் குப்பிகளை வீசி பெண் உள்பட இருவா் தாக்குதல் நடத்தினா்.

இவா்கள் 4 பேரையும் பாதுகாப்புப் படையினா் கைது செய்து டெல்லி காவல்துறையில் ஒப்படைந்தனா். நாடாளுமன்றச் சாலை காவல் நிலையத்தில் வைத்து அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம் மீதான பயங்கரவாதத் தாக்குதலின் 22-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் நடந்த இந்தத் தாக்குதல் திட்டத்தை 6 நண்பா்கள் இணைந்து செயல்படுத்தியது காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல கட்ட சோதனைகளை தாண்டி மக்களவைக்குள் புகைக் குப்பிகளை இருவர் கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா சில உத்தரவுகளை வெளியிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் கேலரியில் இருந்து மக்களவைக்குள் இருவர் குதித்த ஒரு நாள் கழித்து, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, மத்திய டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்திற்கும் செஞ்சிலுவைச் சங்க கட்டிடத்திற்கும் இடையிலான சாலையை அணுகுவதற்கு நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் அருகிலுள்ள அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இன்றுமுதல் மறுஅறிவிப்பு வரும்வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர் மாடத்தில் இருந்து அவைக்குள் குதிப்பதை தடுக்கும் வகையில் கண்ணாடி தடுப்புகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதன்மை வாயிலில் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் தனி வாயிலில் அனுமதிக்கப்படவுள்ளனர்.

மத்திய அமைச்சர்களை தவிர, பிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் வருவதற்கு இனி அனுமதி இல்லை என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையங்களில் இருப்பது போன்று முழு உடலை ஸ்கேன் செய்யும் அதிநவீன இயந்திரங்களை நாடாளுமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!