ஒவ்வோர் இந்திய மொழியிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரங்கள்; பிரதமர் வரவேற்பு
தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மோடி,
நாட்டில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நீதிமன்ற விசாரணையை நேரலை நிகழ்வாக வெளியிட்டது. இது பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டது.
இந்நிலையில், மராட்டியம் மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற விசாரணை நேரலையாக நிகழும்போது, சட்ட துறை ஆசிரியர்கள் மற்றும் பயிலும் மாணவர்கள் அதனை கவனித்து, விவாதத்தில் ஈடுபடலாம். இதுபோன்று நேரலையில் விசயங்களை விவாதிக்கும்போது, நமது சமூகத்தில் ஊடுருவியுள்ள அநீதியை நீங்கள் உணர முடியும் என்று பேசினார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், எங்களது அடுத்த கட்ட பணியானது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு விவரங்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நகல்களை ஒவ்வோர் இந்திய மொழியிலும் வழங்க இருக்கிறோம். நமது பொதுமக்கள் புரிந்து கொள்ள கூடிய ஒரு மொழியில் எங்களது தீர்ப்பு விவரங்கள் சென்றடையாவிட்டால், நாங்கள் மேற்கொள்ளும் பணியானது நாட்டின் 99% மக்களை சென்று சேராது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி இதனை மேற்கொள்ள முடியும் என்று கூறினார்.
இதற்கிடையில், தலைமை நீதிபதியின் பரிந்துரைகளுக்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அவரது பரிந்துரைகளை பாராட்டி, இது "பாராட்டுக்குரிய சிந்தனை" என்று கூறினார். மாநில மொழிகளில் தீர்ப்பின் நகல் வெளியாவதால் பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு எந்த தீர்ப்பையும் படிக்க உதவும் என்று பிரதமர் மோடி கூறினார்.
அவரது பேச்சுக்கு வரவேற்பு தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. அவை நமது கலாசார துடிப்போடு சேர்ந்து உள்ளன. பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை ஒருவரது தாய்மொழியில் படிக்கும் வகையில் வாய்ப்பை வழங்குவது உள்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க எண்ணற்ற முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என தெரிவித்து உள்ளார்.
கடந்த காலங்களில், நீதித்துறை தீர்ப்புகளை சாமானியர்களுக்கு அணுகக்கூடிய வகையில் பிராந்திய மொழிகளில் கிடைக்கச் செய்ய வேண்டும் என பிரதமர் அடிக்கடி குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu