ஜாமீன் வழங்குவதை எளிமைப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை
நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச், ஜாமீன் நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், சீரமைக்கவும் பிரத்யேகமாக புதிய சட்டத்தை கொண்டு வருமாறு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் கூறுகையில், இந்தியாவில் உள்ள சிறைகள் விசாரணைக் கைதிகளால் நிரம்பி வழிகின்றன. சிறைகளில் உள்ள கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் விசாரணைக் கைதிகளாக உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தனிமனித சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, காவல்துறையினர் தங்களின் கைது செய்யும் அதிகாரத்தை பயன்படுத்தும் மனப்போக்கைக் காட்டுகிறது.
இந்த வகை கைதிகளில், பெரும்பான்மையானவர்கள் கைது செய்யப்பட வேண்டிய அவசியமே இல்லாதவர்கள். இந்த விசாரணைக் கைதிகளில் பலர் படிப்பறிவில்லாதவர்கள், ஏழைகள் மற்றும் பெண்கள். அவர்களின் சமூக சூழ்நிலைகள் அவர்களை குற்றம் செய்ய தூண்டுகின்றன. அதுமட்டுமல்லாது, காவல்துறையும் கைது செய்யும் அதிகாரத்தை பயன்படுத்த தேவையில்லை.
ஜனநாயகத்தில், காவல்துறை அரசு என்ற எண்ணம் ஒருபோதும் இருக்க முடியாது. இரண்டும் கருத்துரீதியாக ஒன்றுக்கொன்று எதிரானவை. எனவே, ஜாமீன் நடைமுறை குறித்து தனி மற்றும் விரிவான சட்டத்தை, குறிப்பாக அதை ஒரு எளிய நடைமுறையாக கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது,
ஜாமீன் வழங்குவதை ஒழுங்குபடுத்தும் வகையில், ஜாமீன் சட்டத்தின் தன்மையில் ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும், மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த ஆலோசனையை மத்திய அரசு பரிசீலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று உச்சநீதிமன்றம் கூறியது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu