ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றார் சாம்பாய் சோரன்

ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக பதவி ஏற்றார் சாம்பாய் சோரன்

ஜார்கண்ட் மாநில புதிய முதல்வர் சாம்பாய் சோரனுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்.

ஜார்கண்ட் மாநில புதிய முதல்வராக சாம்பாய் சோரன் இன்று பதவி ஏற்றார்.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் இன்று பதவியேற்றார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன், சாம்பாய் சோரனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு விவகாரத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து கொண்டது. முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை விசாரணைக்காக 10 முறை அழைத்து சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. கடந்த மாதம் 20-ந் தேதி மட்டும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகி இருந்தார் ஹேமந்த் சோரன். இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினமும் ஹேமந்த் சோரனிடம் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால் தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து உடனடியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இணைந்து சாம்பாய் சோரனை புதிய முதல்வராக பதவியேற்க அழைக்க வேண்டும் என ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக உடனே முடிவெடுக்காதது பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது.

இந்நிலையில் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து தமக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏக்கள் கடிதங்களையும் வீடியோ பதிவுகளையும் கொடுத்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார் சாம்பாய் சோரன். அப்போதும் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துப் போட்டு புதிய ஆட்சி அமைக்குமோ என்கிற அச்சம் எழுந்தது. இதனால் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் புறப்படவில்லை. இதனையடுத்து எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த பரபரப்புகளுக்கு நடுவே நேற்று நள்ளிரவில் சாம்பாய் சோரனை முதல்வராக பதவியேற்க வருமாறு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று ஜார்க்கண்ட் மாநில புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சட்டசபையில் சாம்பாய் சோரன், பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story