நாளை முதல் ஹால்மார்க் நகைகள் மட்டுமே விற்பனை: மத்திய அரசு உத்தரவு
பைல் படம்.
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) இது பொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் / கலைப் பொருள்களுக்கான ஹால்மார்க் உரிமம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
கலப்படத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பது மற்றும் உற்பத்தியாளர்கள் சட்டப்பூர்வமான தரத்தை பேணுவதைக் கட்டாயப்படுத்துவது ஹால்மார்க்கிங்கின் நோக்கம் ஆகும். தங்க நகைகளில் ஹால்மார்க் என்பது அதன் தரத்திற்கான அடையாளம். தற்போது, தங்க நகைகளில் ஹால்மார்க்கிங் என்பது BIS ஹால்மார்க் முத்திரை, காரட்டில் தங்கத்தின் தூய்மை மற்றும் 6 இலக்க எண், எழுத்து கொண்ட எச்யூஐடி (HUID) குறியீடு ஆகிய 3 அடையாளங்களைக் கொண்டுள்ளது.
எச்யூஐடி (HUID) என்பது தனித்துவமான 6 இலக்க எண்ணெழுத்து குறியீடு கொண்ட பிரத்யேக அடையாள குறியீடு ஆகும். தற்போது தமிழகத்தில் 26 மாவட்டங்கள் உட்பட இந்தியாவில் 288 மாவட்டங்களில் தங்கத்தின் ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்கள் பிஐஎஸ் கேர் (BIS CARE) செயலியின் மூலம் ஹால்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளில் உள்ள HUID இன் நம்பகத்தன்மையை சரிபார்க்கலாம். மேலும், பி ஐ எஸ் அங்கீகாரம்பெற்ற மதிப்பீடு மற்றும் ஹால்மார்க்கிங் மையங்களில் (AHCs) சோதனைக் கட்டணமாக ரூ. 200/- செலுத்தியும் சோதனை செய்து கொள்ளலாம்.
ஹால்மார்க்கிங் திட்டம், சரியான தங்கத்தை பெறுகிறார் என்ற மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தையும் திருப்தியையும் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது. மேலும், நகைக்கடைக்காரரின் திறன், தரத்திற்கான உறுதிப்பாடு மற்றும் தூய்மையில் நிலைத்தன்மையின் உறுதிப்பாட்டிற்கான வலுவான ஆதாரம் ஆகியவற்றை வழங்குகிறது.
நாளை முதல் பிஐஎஸ் பதிவு செய்யப்பட்ட நகைக்கடைகள் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளை மட்டுமே விற்க வேண்டும் என நுகர்வோர் விவகார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu