சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய்: தேவசம் போர்டு
சபரிமலை ஐயப்பன் கோவில்.
சபரிமலையில் வருடாந்திர மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.154.77 கோடியாக இருந்தது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் எதிர்பார்த்ததை விட குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையால் வருமானம் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்தது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நடை திறக்கப்பட்ட முதல் 28 நாள்களில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக,வருமானம் ரூ.20 கோடிக்கு மேல் குறைந்துள்ளது.
திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் ரூ. 154.77 கோடியாக இருந்த வருமானம் இந்த ஆண்டு ரூ.134.44 கோடியாக உள்ளது.
மொத்த வருவாயில் அப்பம் விற்பனை மூலம் ரூ.8.999 கோடியும், நன்கொடையாக ரூ.41.80 கோடியும் கிடைத்துள்ளது. அரவணை விற்பனை மூலம் ரூ.61.91 கோடியும், தங்கும் விடுதிகளின் வருமானம் ரூ.34.16 லட்சம் கிடைத்துள்ளது
இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் கிடைத்த வருவாய் ரூ.71.46 லட்சம். அன்னதானம் நடத்துவதற்கான பங்களிப்பும் கடந்த சீசனில் ரூ.1.20 கோடியிலிருந்து ரூ.1.14 கோடியாக குறைந்துள்ளது.
சபரிமலையில் எதிர்பார்த்ததை விட குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையே வருமானம் குறைவுக்கு காரணம், நடைப்பயணமாக வரும் பக்தர்களின் வருகையும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 18.16 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். கடந்த முறை இதே கால கட்டத்தில் 18.88 லட்சமாக இருந்தது. அதிகபட்சமாக டிசம்பர் 8 ஆம் தேதி 88,744 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.
சென்னை வெள்ளம் மற்றும் தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் காரணமாக முதல் இரண்டு வாரங்களில் எதிர்பார்த்ததை விட குறைவான அளவிலேயே பக்தர்கள் வருகை இருந்தது. வாக்குப்பதிவுக்குப் பிறகு, பக்தர்கள் வருகை அதிகரித்தது.
அரவணை விற்பனை ஒரு நாளைக்கு 2.25 லட்சம் டின்களில் இருந்து 3.25 லட்சம் டின்களாக உயர்ந்துள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதி 4.25 லட்சம் டின்கள் விற்கப்பட்டபோது விற்பனை உச்சத்தை எட்டியது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu