ஆக்கிரமிப்பு மதரசா இடிக்கப்பட்டதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் கலவரம்

ஆக்கிரமிப்பு மதரசா இடிக்கப்பட்டதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் கலவரம்

கலவரத்தில் தீக்கிரையான கட்டிடம்.

ஆக்கிரமிப்பு மதரசா இடிக்கப்பட்டதால் உத்தரகாண்ட் மாநிலத்தில் கலவரம் வெடித்து உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு இருந்த மதரசாவை அதிகாரிகள் இடித்ததாகவும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதோடு கல்வீச்சு, வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரகாண்டில் நாட்டிலேயே முதல் முறையாக பொதுசிவில் சட்ட மசோதா நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுசிவில் சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்றும் அதன்பிறகு சட்டமாகும் எனவும் அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நேற்று கூறியிருந்தார். பொதுசிவில் சட்ட மசோதா நிறைவேற்றியிருக்கும் முதல் மாநிலம் என்பதால் கடந்த சில நாட்களாகவே உத்தரகாண்ட் தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹல்ட்வானியில் வன்முறை வெடித்துள்ளது. அதாவது, பன்புல்புரா காவல் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு இடத்தில் உரிய அனுமதி இன்றி சட்ட விரோதமாக மதரசா கட்டப்பட்டு இருந்ததாகவும் இதனால், அந்த மதரசாவை நகராட்சி அதிகாரிகள் இடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், இதனால், கோபம் அடைந்த அந்த பகுதியில் வசிக்கும் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

காவல் நிலையத்தை சூழ்ந்து கும்பல் தாக்குதல் நடத்தியதாகவும் இதில், போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. பதற்றத்தை தணிக்க கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவத்தில் போலீசார், பத்திரிகையாளர்களும் காயம் அடைந்துள்ளனர். டிரான்ஸ்பார்மர் ஒன்றிற்கும் மர்ம நபர்கள் தீ வைத்ததால் அந்த பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

Tags

Next Story