இந்தி மொழியால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்தியா கூட்டணிக்குள் கலகம்

இந்தி மொழியால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்தியா கூட்டணிக்குள் கலகம்

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்.

இந்தி மொழியால் ஏற்பட்ட பிரச்சினையால் இந்தியா கூட்டணிக்குள் கலகம் உருவாகி உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் 'இந்தி' மொழியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதை வைத்து 'இந்தியா' கூட்டணிக்குள் ஒரு விரிசலை ஏற்படுத்த அண்ணா மலை முயற்சி செய்து வருகிறார் என்று தி.மு.க. தரப்பு ஒரு விளக்கத்தை வைத்து வருகிறது.

ஆனால், டெல்லியில் நடத்த 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில் என்ன பேசினார் நிதிஷ்குமார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. அவர், 'இந்தி தேசிய மொழி ஆகவே அதைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று சொன்னதாகச் சொல்லப்படுகிறது. அதற்குத் தயாநிதி மாறன் பேசிய வீடியோ ஒன்றை பா.ஜ.க.வினர் பரவலாக சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். அந்த வீடியோ அப்படியே வடமாநிலம் வரை சென்று சேர்ந்திருக்கிறது.

மேற்கு வங்க பா.ஜ.க 'தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த அமித் மாளவியா, "தி.மு.க.வின் எம்.பி. தயாநிதி மாறன் இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டில் கழிவறைகளைச் சுத்தம் செய்வதாகப் பேசி இருக்கிறார். இது குறித்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ராகுல்காந்தியும் நிதிஷ்குமாரும் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கூறி இருக்கிறார். அதற்கு பேக்ட் செக்கர் முகமது சுபைர் என்பவர் பின்னூட்டமாக ஒரு கேள்வியை எழுப்பி இருக்கிறார். 9 மாதங்களுக்கு முன்பு பேசிய பழைய வீடியோவை ஏன் இப்போது பயன்படுத்தி உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அந்த வீடியோவை ரீ ட்வீட் செய்த அண்ணாமலை, 'உபி மற்றும் பீகார் மக்களை தி.மு.க. எம்பி அவதூறாகப் பேசிய இந்த வீடியோவுக்கு திமுகவிடம் இருந்து கிடைத்துள்ள ஒரே பதில், இது பழைய வீடியோ என்பது மட்டும்தான். பிரிவினைவாத கொள்கையைக் கொண்ட திமுக இன்றும் இதே மொழியைத்தான் பயன்படுத்துகிறது. சமீபத்தில் திமுக எம்.பி. ஒருவர் வடமாநில இந்தி பேசும் மக்களை கோ மூத்திரம் குடிப்பவர்கள் எனப் பேசி இருந்தார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்கள் இன்று இதே மொழியைப் பயன்படுத்தி வருகிறார்கள்' எனக் கூறி இருக்கிறார்.

உண்மையில் 'இந்தியா' கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து டிஆர் பாலுவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது 'நாங்கள் இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை விரும்புகிறோம்' என்று சொல்லிவிட்டுக் கடந்து போய்விட்டார். ஆக, என்ன நடந்தது என்பது குறித்து ரகசியம் காத்து வருகிறது திமுக.

பொதுவாக இந்த மாதிரியான கூட்டத்தில் நிதீஷ் குமார் போன்றவர்கள் ஹிந்தியில் பேசுவார்கள். அதை ஆங்கிலத்தில் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் மொழிபெயர்ப்பார்கள். ஆனால், இந்த முறை நடக்கவில்லை. மொழிபெயர்க்கப்படவில்லை என்று தெரிந்த பிறகு, டி.ஆர்.பாலு மொழிபெயர்க்க வேண்டுகிறார். அப்படிக் கேட்டபோது நிதிஷ்குமார், 'இந்தி தேசிய மொழிதானே நீங்கள் அதைக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று சொன்னார் என்று ஆங்கில பத்திரிகையில் வந்த செய்தியைக் கண்டு தெரிந்துகொண்டேன். அந்தச் செய்தியைக் கூட உறுதியாக அவர்கள் எழுதவில்லை. நடந்ததாகத் தெரிகிறது என்றே சொல்லி எழுதி இருந்தார்கள்

அதன்பிறகு என்ன நடந்தது? பொதுவாக இந்தியில் பேசுபவர்கள், அதற்குமேல் ஆங்கிலத்தில் பேசினார்கள். இப்படித்தான் அந்த ஆங்கில ஏடு செய்தி வெளியிட்டிருந்தது. மீண்டும் குறிப்பிட்டுச் சொல்ல நான் விரும்புவது என்னவென்றால், அங்கு என்ன நடந்தது என்பது அதிகாரப்பூர்வமாக நமக்குச் சொல்லப்படவில்லை.

அப்படி ஒருவேளை நிதிஷ்குமார் அவ்வாறு கூறியிருந்தால், அவர் கருத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், இந்தி தேசிய மொழி இல்லை. அது ஒன்றிய அரசின் அலுவல் மொழி மட்டும்தான். அப்படித்தான் அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதையடுத்து 8வது அட்டவணையில் இந்தி உள்ளிட்ட 22 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. ஏன் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மட்டும் இருக்க வேண்டும்? 22 மொழிகளும் அலுவல் மொழிகளாக இருக்கக் கூடாது என்று நாம் இன்றைக்குக் கேள்வி எழுப்புகிறோம். ஐரோப்பாவில் 24 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன.

ஆகவே, இதைவைத்து 'இந்தியா' கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயல்கிறது. அது நடக்காது என்கிற ஒரு வாதமும் வைக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story