டிசம்பர் விற்பனையில் சுவாசக் கோளாறுக்கான மருந்து முதலிடம்

டிசம்பர் விற்பனையில் சுவாசக் கோளாறுக்கான மருந்து முதலிடம்
X
கடந்த டிசம்பர் மாதம் விற்பனையான மருந்துகளில் ஆஸ்துமா மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கு பரிந்துரைக்கப்படும் ஃபோராகோர்ட் விற்பனை முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த டிசம்பரில் இந்தியாவில் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து மற்றும் நீரிழிவு நோய்க்கான மருந்துகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, சுவாசக் கோளாறுக்கான ஃபோராகோர்ட் அதிகம் விற்பனையாகியிருப்பது என்ற அதிர்ச்சித் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மருந்து சந்தையில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஐக்யூவிஐஏ வெளியிட்ட புள்ளிவிவரத்தில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்த மருந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

அதிகரிக்கும் வாகனப்பெருக்கத்தால், கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றுவந்த நிலையில், மிச்சமிருந்த நுரையீரல்களையும் கொரோனா தொற்று பாதிக்க செய்துவிட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், டிசம்பர் மாதத்தில் சுவாசக் கோளாறுக்கான மருந்து ஃபோராகோர்ட் விற்பனை அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது. அதாவது ரூ.85 கோடிக்கு இந்த மருந்து விற்பனையாகியிருப்பதாகவும், இது 22 சதவீதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது புதிதொன்றும் இல்லை என்றும், கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் இதன் விற்பனை முதலிடம் பிடித்து ரூ.81 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதும், குளிர்காலங்களில், சுவாசக்கோளாறு அதிகரிப்பதால், விற்பனை அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனுடன் லிவ்-52 மருந்து விற்பனையும் 36 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

பொதுவாகவே, ஆண்டு முழுக்க மருந்து விற்பனை சந்தையில் நோயெதிர்ப்புச் சக்தி மருந்துகளும், நீரிழிவு மருந்துகளும்தான் முதலிடத்தில் இடம்பிடித்து அமர்ந்திருக்கும்.

ஆனால், இவைகளை குளிர்காலங்களில் ஃபோரோகோர்ட் பின்னுக்குத் தள்ளக் காரணம் அதிகரித்திருக்கும் காற்று மாசுபாடும், வடஇந்திய மாநிலங்களில் நிலவும் கடுங்குளிரும், நாடு முழுவதும் பரவி மக்களை கடும் துயரத்துக்கு ஆளாக்கிய கொரோனாவும் காரணம் என்று கூறப்படுகிறது.

நீரிழிவு, நோயெதிர்ப்பு சக்திகளுக்கான மருந்துகளுடன், இதயநோய், இரைப்பை நோய்களுக்கான மருந்துகளும் முறையே 8 சதவீதம், 6 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மருந்து சில்லறை விற்பனை சந்தை என்பது ரூ.2,13,139 கோடியாகும். இது ஆண்டுதோறும் 10 சதவீத வளர்ச்சியைக் கண்டுவருகிறது.

தற்போது, நீரிழிவு, தோல் மற்றும் மகளிர் பிரச்னைகளுக்கான மருந்து விற்பனை குறைந்திருப்பது, ஒட்டுமொத்த மருந்து விற்பனையில் எதிரொலிக்கிறது என்றும் தகவல்கள் வருகிறது. அதேவேளையில், சிறுநீரகவியல், கண் மருந்துகள், இதயநோய், வலி நிவாரண மருந்துகள் விற்பனை ஆண்டுதோறும் 10 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சியடைந்து வருகிறது.

நோயெதிர்ப்பு சக்தி மருந்துகள் ரூ.67 கோடிக்கும், நீரிழிவு நோய்களுக்கான மருந்துகள் ரூ.68 கோடிக்கும் விற்பனையாகியிருப்பதாகவும், இது முறையே 14 மற்றும் 11 சதவீத சரிவு என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஒற்றை இலக்க எண்களில்தான் வளர்ச்சியைப் பதிவு செய்கிறதாம். அதாவது 4-5 சதவீதத்தில். ஒட்டுமொத்த மருந்து சந்தையில் உள்ளூர் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 83 சதவீத பங்குகளையும் மற்றவை வெளிநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் கொண்டிருக்கின்றன.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு