துவரம், உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்
பைல் படம்.
துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ம் ஆண்டுக்கான ஆதரவு விலை திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுந்து மற்றும் மசூர் பருப்புகளின் கொள்முதலுக்கு விதிக்கப்பட்டிருந்த 40 சதவீத கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் எவ்வித அளவு கட்டுப்பாடுமின்றி இந்த பருப்புகளை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படுவது உறுதிசெய்யப்படுகிறது. மேலும் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பருப்புகள் முழுவதையும் நேரடியாக விற்பனை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகள் எதிர்வரும் கரீஃப் மற்றும் ரபி பருவங்களில் அதிக அளவிலான பரப்பளவில் துவரம், உளுந்து மற்றும் மசூர் பருப்புகளை சாகுபடி செய்ய ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்களுக்கு செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, லாப நோக்கத்தில் வணிகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் ஜூன் 2-ந் தேதி 2023 அன்று அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் கீழ் பருப்பு வகைகளை சேமிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் விரைவில் விலக்கிக்கொள்ளப்படும். பருப்புவகைகளை சேமிப்பதற்கான கட்டுப்பாடுகள் மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், ஆலை உரிமையாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கும் பொருந்தும். இவர்கள் தங்களுடைய சேமிப்பு விவரங்களை நுகர்வோர் நலத்துறையின் (https://fcainfoweb.nic.in/psp) என்ற மின்னஞ்சலில் வெளியிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பல்வேறு சேமிப்புக் கிடங்குகளில் ஆய்வு நடத்தி பருப்புகளின் விலை மற்றும் சேமிப்பு விவரங்களை கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய நுகர்வோர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. மத்திய சேமிப்புக் கிடங்கு கார்ப்பரேஷன் மற்றும் மாநில சேமிப்புக் கிடங்கு கார்ப்பரேஷன்களும் தங்களது சேமிப்பு கிடங்குகளில் உள்ள துவரம் மற்றும் உளுந்தம் பருப்புகளின் விவரங்களை அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu