விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்
நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் ரிலையன்ஸ் ஜியோ களமிறங்கியிருக்கின்றது.
இதற்காக ரிலையன்ஸ் ஜியோ இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ப்ளூஸ்மார்ட் என்ற நிறுவனமும் இணையவுள்ளது. இதன்மூலம் நாட்டில் பல்வேறு இடங்களில் சார்ஜிங் மையங்களை கொண்டு வர இருக்கின்றனர். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் இணைந்து சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வரும்.
புதுடில்லியில் ஒரே நேரத்தில் 30 மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ - பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவன கூட்டணி மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மட்டுமின்றி நிறுவனத்தின் ரிலையன்ஸ் பெட்ரோலியம் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் பணியிலும் களமிறங்க இருக்கின்றன.
தற்போது நிறுவனத்தின்கீழ் 5,500 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன, தற்போது புதிய சார்ஜிங் மையங்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் தீவிரமாக களமிறங்கியிருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்தியாவில் போதியளவு மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தயங்குகின்றனர். புதிய சார்ஜிங் மையங்களின் வருகை இந்த நிலையை மாற்ற உதவும்.
ரிலையன்ஸ் நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீட்டில் மின் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு ஆலையைத் தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தகுந்தது. 'கிரீன் எனர்ஜி ஜிகா காம்பளக்ஸ்' எனும் பெயரில் ரூ. 75 ஆயிரம் கோடி முதலீட்டில் பிரமாண்ட பேட்டரி உற்பத்தி ஆலையைத் தொடங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu