குடியரசு தினவிழா அணிவகுப்பு: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு
கோப்பு படம்
இந்திய குடியரசு தினவிழா, வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் குடியரசு தினவிழாவும், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடைபெறுவது வழக்கம்.
அவ்வகையில், இந்தாண்டுக்கான தமிழக அரசு அலங்கார ஊர்திகள் தயாராகி வந்தன. அதில், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாகக் கூறி, மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதேபோல், ஆந்திரா, கேரளா, மேற்கு வங்க அரசின் அணிவகுப்பு வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை கொண்டுள்ள, மேற்கு வங்க அரசின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரம், தமிழக அளவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு அதிகாரிகளின் போக்குக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu