சரத்பவாரின் ராஜினாமா நிராகரிப்பு: தேசியவாத காங்கிரஸ் கட்சி தீர்மானம்

சரத் பவார் (பைல் படம்).
மகாராஷ்டிராவின் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கும், அவரது உறவினரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களின் ஒருவருமான அஜித் பவாருக்கும் இடையே பூசல் நிலவி வருவதாக கூறப்பட்டது. அஜித்பவார் பாஜகவில் இணையவுள்ளதாகவும் வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, இந்த தகவலை அஜித்பவார் மறுத்தபோதும் கடந்த சில காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நிலவி வந்தது. அக்கட்சியின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் அஜித்பவார் பக்கம் திரும்பியதாகவும் தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக சரத்பவார் அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் அரசியலில் இருந்து விலகவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் இந்த முடிவை அறிவித்தபோது கட்சித் தொண்டர்கள் அதனை ஏற்க மறுத்து அவரே தலைவராக தொடர வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பிரஃபுல் பட்டேல், சரத் பவாரின் ராஜினாமாவை நிராகரிக்கும் வகையில் கட்சியின் உயர்மட்ட குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என தெரிவித்தார். மேலும் சரத்பவாரே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu