ராகுல் காந்திக்கு விதித்த சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு

ராகுல் காந்தி (பைல் படம்).
முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என பேசியதாகவும், அவர் பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கியதாகவும் பாஜக சார்பில் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி சர்ச்சையாக பேசிய இந்த வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மேலும், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் இந்த தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராகுல் காந்தியை, எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் அறிவித்தது.
இந்த சிறை தண்டனை காரணமாக, அடுத்த 8 ஆண்டுகளுக்கு ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சூரத் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் இடைக்கால நிவாரணம் வழங்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu