சில மணிநேர அரசு விழா..! வரிப்பணம் வாரியிறைப்பு..! செலவைக்குறைக்க சமூக ஆர்வலர்கள் கருத்து

சில மணிநேர அரசு விழா..! வரிப்பணம்  வாரியிறைப்பு..!   செலவைக்குறைக்க சமூக ஆர்வலர்கள் கருத்து
X

அவசர அவசரமாக போடப்பட்ட ரோடு  (கோப்பு படம்)

அரசு நிகழ்ச்சிகள் எளிமையான முறையில் நடத்தப்பட்டால் மக்களின் வரிப்பணம் சேமிப்புக்கு வழிவகுக்கும். ஆட்சியாளர்கள் உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

reduction of govt function expenses equal to saving taxes

இந்தியாவி்லுள்ள எந்த மாநிலமாக இருந்தாலும் சரி அங்கு ஆட்சியில் உள்ளோர் அரசு பணத்தினை சிக்கனமாக செலவு செய்யவேண்டியது மிக மிக அவசியம். காரணம் அரசு பணம் என்பது மக்கள் பணம். மக்கள் செலுத்தும் வரிப்பணந்தான் அரசுக்கு வருவாயாக வருகிறது. இதனை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டு தண்ணீர் போல் செலவழிப்பது தேவையற்ற ஒன்று என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பற்றாக்குறை பட்ஜெட்?

அதாவது ஒவ்வொரு நிதியாண்டிலும் மத்திய மாநில அரசுகள் பட்ஜெட் போடுகிறது. அதாவது வரவு செலவு கணக்கு. எப்போது பட்ஜெட் போட்டாலும் வரவை விட செலவு அதிகமாக இருப்பதாகவே இருக்கும். எத்தனையோ மாநிலங்களில் அரசுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகைகள் சரியானபடி வசூல் செய்யப்பட்டால் அந்த அரசுக்கு செலவுப்பற்றாக்குறை நிச்சயம் இருக்காது. தமிழகத்தினைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநகராட்சியிலும், நகராட்சி, கிராம பஞ்சாயத்துகளில் அரசுக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய வரிப்பணம் லட்சக்கணக்கில் நிலுவையில் தொடர்ந்து இருந்தால் எப்படி அரசு இயந்திரமானது சீராக இயங்க முடியும்?

பொதுமக்களில் ஒருசிலர் அவர்கள் அரசுக்கு உரிய காலத்தில் செலுத்த வேண்டிய வரியினை செலுத்தாமல் விட்டுவிடுகின்றனர். வந்து கேட்டால் பார்ப்போம் என ஒரு சிலர் உள்ளனர். இது முற்றிலும் தவறானதாகும். அதேபோல் வரி வசூலிப்பவர்களும் நெருக்கடி தந்து வரியினை வசூலிக்க வேண்டும். ஆனால் பல மாநகராட்சிகளில் கட்டாயப்படுத்தாமல் விடுவதால் வரவேண்டிய வரித்தொகை தேங்கிநிற்கிறது.

reduction of govt function expenses equal to saving taxes


அரசு விழா ஆடம்பரம்

அதேபோல் அரசு விழா என்றால் ஆடம்பரமாக நடத்த வேண்டிய அவசியம் தேவைதானா? என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது ஒரு மணிநேரத்திற்குள் முடிவடைந்து விடக்கூடிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு ஒரு வார காலமாக மேடை அமைக்கும் பணிகள், பந்தல் போடுவது, தரைத்தளத்தினை பொக்லைன் கொண்டு சீராக்குதல், போன்ற வேலைகள் நடக்கின்றன. இதெல்லாம் அநாவசிய செலவு என பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டுகின்றனர். இவையெல்லாம் யாருடைய பணம்? மக்கள் வரிப்பணம்தானே செலவிடப்படுகிறது? அதுமட்டும் அல்லாமல் ஒரு மாவட்டத்திற்கு முதல்வர் வருகிறார் என்றால் ஒருவாரகாலமாக அதிகாரிகள் தினந்தோறும் சென்று ஆய்வுப் பணி மேற்கொள்கின்றனர். இதனால் அவர்களுடைய வழக்கமான பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. அதுமட்டும் அ ல்லாமல் அவர்களுடைய வாகனங்களுக்கான எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்.

நிச்சயம் மாற்றம் தேவை

அரசியல்வாதிகள் அவர்களுடைய கட்சிப்பணத்தினைக் கூட சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வாரியிறைப்பதால் யாருக்கு என்ன பயன்? ஆடம்பரத்தினை புறக்கணித்து எளிமையாக நடத்திவிட்டு அந்த பணத்தை வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தலாமே.


reduction of govt function expenses equal to saving taxes

அரசு நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் எதிர்காலத்தில் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று ஆளும் ஆட்சியாளர்கள் உறுதி எடுத்துக்கொண்டால் நிச்சயம் அந்த மாநிலம் தன்னிறைவைப் பெறும் என்பது உறுதி. ஒவ்வொரு ரூபாயும் மக்களுடைய பணம். அதனை வீணாக செலவிடக்கூடாது என்பதில் இந்தியாவில் உள்ள அத்தனை மாநில முதல்வர்களும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் ஆகும்.

அரசு அதிகாரிகளுக்கும் மாநிலத்தின் சார்பில் அரசு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்த அதிகாரிகள் தேவையான பயணத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சொந்த வேலைகளுக்காக யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இதனை அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆட்சித்தலைவர்கள் நேரடி கண்காணிப்பில் இதனை அவ்வப்போது அதிரடி ஆய்வு செய்ய வேண்டும். பல அதிகாரிகள் அரசு வாகனங்களை விடுமுறை நாட்களில் சொந்த உபயோகத்திற்கு உபயோகப்படுத்துவதை பல இடங்களில் காண முடிவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மாநிலத்திலுள்ள அரசின் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டு அரசுப்பணத்தினைச் சிக்கனமாக செலவிட வேண்டும் என்ற சுற்றறிக்கையினை மாநில முதல்வர்கள் அனைத்துதுறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பிடல்வேண்டும்.

எந்தவொரு அரசு நிகழ்வாக இருந்தாலும் சரி, அது விவிஐபிக்கள், அல்லது விஐபிக்கள் யார் பங்கேற்றாலும் சரி அந்த நிகழ்விற்கான செலவினங்களுக்கு தேவையானதற்கு மட்டுமே செலவிட வலியுறுத்த வேண்டும். ஆடம்பரம் என்பது தேவையில்லாத ஒன்று. கொரோனா தொற்றால் இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலுமே தொழில்கள் முடங்கிப்போய் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஒரு மாநிலத்தில் தொழில்கள் முடங்கினால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் . அந்த வகையில் எந்த தொழில்துறை முடங்கினாலும் அரசுக்குத்தான் நஷ்டம்.


reduction of govt function expenses equal to saving taxes

இதுபோல் ஆடம்பரமாக செலவிடப்படும் அரசுப்பணத்தினை கல்வி ,வேலைவாய்ப்பு, தொழில், நீர்ப்பாசன வசதி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு செலவிடலாம். தமிழகத்தினைப் பொறுத்தவரை மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் அதிக அணைகள் கட்டப்பட்டன. அவருடைய ஆட்சிக்காலத்தில் மக்களுக்கான திட்டங்கள் சரிவர மக்களைச் சென்று சேர்கின்றனவா? என மக்களிடமே கேட்டறிந்து செயல்பட்டார். அதேபோல் கல்வித்துறையும் அவருடைய காலத்தில்தான் சிறந்து விளங்கியது.

மக்களின் வரிப்பணத்தினை உரிய முறையில் சிக்கனமாக செலவிடும் வகையில் திட்டங்களை ஆளும் அரசு தீட்ட வேண்டும். எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதில் எந்த வித கரெப்ஷனும் இல்லாமல் நிறைவேறுகிறதா? என அதிகாரிகளும், ஆளும் ஆட்சியாளர்களும் கண்காணிக்கவேண்டும். ஊழலுக்கு இடம் கொடுக்காத வகையில் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் மக்களின் பணமான அரசு பணம் உரிய முறையில் செலவிடப்படுகிறது என்று பொருள்.

இனியாவது விழிப்பார்களா?

மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கான நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேர்கின்றதா? என கண்காணிப்பது அவசியம். இடையில் புகும் இடைத்தரகர்களைக் களையெடுக்க வேண்டும். ஊழலுக்கு வித்திடும் ஊழல் பெருச்சாளிகளை அழிக்க வேண்டும். அதேபோல் அரசு விழாக்களி்ல் ஆடம்பரத்தினைத் தவிர்த்து மிக சிக்கனமான முறையில் எளிய வகையில் நடத்தப்படவேண்டும். ஒவ்வொரு காசும் எண்ணி எண்ணி செலவிடுவது அவசியம். அரசுப்பணத்தை துஷ்பிரயோகம் செய்வோர் மீது அவசியம் நடவடிக்கை எடுக்க அரசு முனைய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொசுறு செய்தி

அரசியல் ரீதியாக தேர்தல்களின் போது கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அரசு, எதிர்க்கட்சிகள், நிதி ஆயோக், தேர்தல் ஆணையம், நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை அமைக்க 2022ஆகஸ்ட் 3ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடிவு செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய, தேர்தல் ஆணையம், மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா எம்.பி.யுமான கபில் சிபல் மற்றும் மனுதாரர்கள் ஆகியோருக்கு, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை ஒழுங்குமுறைப்படுத்த நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து 7 நாட்களுக்குள் அறிக்கை வழங்க கேட்டுக்கொண்டது.

இந்த விவகாரத்தில் ஆலோசனைகளை வழங்க அழைக்கப்பட்ட சிபல், இந்த விவகாரம் அரசியல் மற்றும் பொருளாதார தொடர்புடையது மற்றும் இது தேர்தலைப் பற்றியது அல்ல. அதனால் தேர்தல் ஆணையம் இந்த விவாதத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.


இவ்வாறான உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளால் இலவசங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட அரசியல் கட்சியினர் தங்களது மாய வித்தைகளை இலவசங்கள் மூலமாக காட்டிவருவதும் தொடர்கிறது. "என்று தீருமோ இந்த இலவச மோகம்..?"

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்