10 ரூபாய் நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி விளக்கம்
பத்து ரூபாய் நாணயங்கள்
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணமே உள்ளது. இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அரசு அங்கீகரித்த நாணயத்தை மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
பொதுவாக நாட்டின் பொருளாதாரம் ,சமூகம் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக நாணயங்களுக்கு பல்வேறு வடிவங்கள் அளிக்கப்படுகின்றன. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருக்கும் காரணத்தால் பல்வேறு வடிவம் கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருப்பது இயல்பானது. சில நிகழ்வுகள் மற்றும் பிரபலங்களை நினைவுபடுத்தும் வகையிலும் நாணயங்கள் வடிவமைக்கப்படும். அவை அனைத்தும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்திற்கு விடப்படுபவையே.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005ல் ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரத்தொடங்கியது. புழக்கத்திற்கு வந்த சில காலங்களில் அதன் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு ஒரு காரணமாக அமைந்தது நாணயத்தின் வடிவம்.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் ஒன்று போல் ஒன்று இல்லாமல் இருக்க, மக்கள் மத்தியில் அது போலியான நாணயம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. ஆனால் உண்மையாதெனில் ரிசர்வ் வங்கி இதுவரை பதினான்கு வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது, ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து மாறுபட்டு உள்ளது.
அதிலும் முக்கியமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம் இருக்காது எனவே மக்கள் அதனை போலியான நாணயம் என நம்பத்தொடங்கி அது காலம் செல்ல செல்ல பத்து ரூபாய் நாணயத்தை வங்கிகள் நிறுத்த போகின்றன என்றும் அவை செல்லாது என்றும் பல வதந்திகள் கிளம்பின.
சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும். அதுவே இந்த மாவட்டங்களைக் கடந்து மற்ற மாவட்டங்களுக்குச் சென்றால், இந்த பத்து ரூபாய் நாணையங்கள் செல்லாது என்ற நிலை ஏற்பட்டது
இவ்வாறு 14 வகையாக வெளியிடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்களால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டு புழங்குவதற்கு அச்சத்தினை ஏற்படுத்தியது. மேலும், புழக்கத்திற்கு அச்சம் ஏற்பட்டவுடன் அரசு தரப்பில் இருந்தும் சரியான விளக்கம் தரப்படவில்லை.
மற்றொரு கூற்றும் இருக்கிறது. அதாவது, வாரசந்தை மற்றும் ஷேர் ஆட்டோக்களில் பத்து ரூபாய் நாணயம் தரும்போது, அது அவர்களுக்கு சுமையாக மாறியதால், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என அவர்கள் வதந்தியை கிளப்பி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தியன் ரிசர்வ் வங்கி நேரடியாக தலையிட்டு பல்வேறு நடவெடிக்கைகள் மற்றும் அறிக்கைகளை வெளியிட்டது. அதற்கும் ஒரு படி மேலே சென்று 10 ரூபாய் நாணயம் செல்லும் என பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்தன.
அதன் படி மக்களின் தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்புகள் விடுத்து அதனை பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தின. 10 ரூபாய் நாணயங்களை பற்றி சந்தேகத்துடன் வரும் மக்களுக்கு புரிய வைக்கும் படி வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டன.
மேலும் 14440 என்ற எண்ணைத் தொடர்புக்கொண்டால் நமக்கு ஏற்படும் 10 ரூபாய் நாணயத்தை பற்றிய சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துக்கொள்ளலாம். https://www.rbi.org.in/ என்ற இணையதளத்திலும் இது தொடர்பாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 வகை 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும். அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 124A வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றம். அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். மேலும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால், அரசு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu