குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை: ராஜ்நாத் சிங் உருக்கம்
மணிப்பூருக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இம்பாலில் நடைபெற்ற இந்திய ராணுவ நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
நான் எனது சிறுவயது கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் ராணுவத்தில் சேர விரும்பி, அதற்காக எழுத்துத் தேர்வு எழுதினேன். ஆனால், எனது தந்தையின் மரணம் உட்பட எனது குடும்பத்தில் ஏற்பட்ட சில சூழ்நிலைகளால் என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை.
ராணுவ சீருடையை குழந்தைக்கு கொடுத்தால், அவனது குணம் மாறுகிறது. இந்த சீருடையில் ஒரு பெரிய கவர்ச்சி இருக்கிறது. இந்தியா-சீனா இடையே மோதல் நடந்து கொண்டிருந்த போது, உங்களுக்கு அனைத்து விவரங்களும் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கும் அன்றைய ராணுவ தளபதிக்கும் தெரியும். நமது ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சலும், தைரியமும் தெரியும். நாடு எப்போதும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும்.
நான் எங்கு சென்றாலும் ராணுவ வீரர்களை சந்திப்பதை உறுதி செய்து கொள்கிறேன். எனது மணிப்பூர் பயணம் திட்டமிடப்பட்டபோது, நான் இராணுவத் தளபதி பாண்டேயிடம், அசாம் ரைபிள்ஸ் மற்றும் 57வது மலைப்பிரிவின் துருப்புக்களை சந்திக்க விரும்புகிறேன் என கூறினேன்.
ராணுவ வீரர்களை சந்திப்பது எனக்கு ஒரு பெருமையை அளிக்கிறது. டாக்டர்கள், பொறியாளர்கள் மற்றும் ஆடிட்டர்கள் ஏதோ ஒரு வகையில் தேசத்திற்குப் பங்காற்றுகிறார்கள் என்றாலும், உங்கள் தொழில் அதை விட மேலானது.
அசாம் ரைபிள்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது, அவர்கள் வடகிழக்கின் காவலாளி என்றழைக்கப்படுவது சரியானதாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu