சாகித்திய அகாடமி விருதை பெற்றுக் கொண்ட எழுத்தாளர் ராஜேந்திரன்
சாகித்திய அகாடமி விருது (பைல் படம்).
சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம் என 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம் போன்ற பல்வேறு தளங்களில் இயங்கக்கூடிய எழுத்தாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும் பட்டையமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2022ம் ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான சிறந்த படைப்பாக காளையார் கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் ராஜேந்திரன் எழுதிய ’காலாபாணி’ நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் மன்னர்களை நாடு கடத்துதல் தொடர்பாகவும், அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த வரலாற்று சான்றுகள் தொடர்பாகவும் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் காலா பாணி நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து எழுத்தாளர் மு.ராஜேந்திரன் கூறுகையில், “சிப்பாய் கலகத்துக்கு 56 ஆண்டுகளுக்கு முன்னர் 1801ம் ஆண்டு நடைபெற்ற இந்த எழுச்சி போர் தான் இந்திய சுதந்திரத்துக்கான முதல் போர் ஆகும். குறிப்பாக புனே முதல் நாங்குனேரி வரையிலான 1,400 கிலோமீட்டர் தொலைவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் எழுச்சியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய புரட்சி போர் இது.
அதிலும் குறிப்பாக 1801 மற்றும் 1802 ஆகிய ஆண்டுகளில் நடந்த புரட்சி என்பது தமிழகத்தை சார்ந்த சாமனியர்களால் நடத்தப்பட்ட புரட்சி. அதுவே மக்கள் புரட்சியும் ஆகும். எனவே இந்திய சுதந்திர போராட்டத்துக்கான வரலாறு என்பது தென் தமிழகத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பதே கோரிக்கை. அந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தான் இந்த நாவல் எழுதப்பட்டது.
தற்போது இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் பார்வை தென்தமிழகத்தை நோக்கி திரும்பி உள்ளது. குறிப்பாக “காலா பாணி” நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்த பின்னர், இந்திய சுதந்திர வரலாறு தென் தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu