'பாரத் ஜோடோ யாத்ரா'வை பின்னுக்கு தள்ளியது ராஜஸ்தான் காங்கிரஸ் புயல்

பாரத் ஜோடோ யாத்ராவை பின்னுக்கு தள்ளியது ராஜஸ்தான் காங்கிரஸ் புயல்
X
ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’வை பின்னுக்கு தள்ளி உள்ளது ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட புயல்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த ஒற்றுமை யாத்திரையை கடந்த ஏழாம் தேதி கன்னியாகுமரியில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றுபடுத்தி ஒரு வலுவான எதிர்ப்பை மத்திய அரசு எதிராக காட்டுவது தான் இந்த ஒற்றுமை யாத்திரையின் முக்கிய நோக்கம் ஆகும்.


12 மாநிலங்கள் வழியாக 150 நாட்கள் கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி வரை 3500 கிலோமீட்டர் நடை பயணமாக செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டு அதன்படி நடை பயணம் சென்று கொண்டிருக்கிறார். கேரள மாநிலத்தில் நடை பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாளை தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் வழியாக கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல இருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுக்க பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் முன்னணி தலைவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் இந்த வேண்டுகோளை ராகுல் காந்தி நிராகரித்து விட்டார். இறுதியாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் ஒற்றுமை நடை பயணத்திற்கு இடையே ராகுல் காந்தியை சந்தித்து எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இதனை தொடர்ந்து அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி வேட்பாளராக நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் தற்போதைய கொள்கைப்படி 'ஒரு நபருக்கு ஒரு பதவி'என்ற திட்டத்தின் கீழ் அசோக் கெலாட் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி ஏற்க விரும்பினால் ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவுரை வழங்கினார். இதற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஜெய்ப்பூரில் மேலிட பார்வையாளர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அசோக் கெலாட்டிற்கு பதிலாக சச்சின் பைலட்டை ராஜஸ்தான் மாநில முதல்வராக முன்மொழிவது என்பது அவர்களது திட்டமாகும்.


ஆனால் இந்த கூட்டத்தில் 92 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் அசோக் கெலாட்டை முதல்வர் பதவியில் இருந்து மாற்றக்கூடாது.ஏற்கனவே அசோக் கெலாட்டிற்கு எதிராக பிரச்சனை செய்த சச்சின் பைலட்டை எங்களால் முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி வருகிறார்கள். இந்த பிரச்சனையில் அசோக் கெலாட் வெளிப்படையாக எதையும் கூறவில்லை என்றாலும் அவருக்கு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் இல்லை என்று தெரிகிறது. அவருடைய அனுமதி இல்லாமல் அவரது ஆதரவாளர்கள் இப்படி ஒரு போராட்டத்தை தொடங்கி இருக்க மாட்டார்கள் என்பது அரசியல் வல்லுநர்களின் கணிப்பு ஆகும்.

சச்சின் பைலட்டை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ள மறுக்கும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிந்த பிறகு முதல் மந்திரி தேர்வு செய்ய வேண்டும், சச்சின் பைலட்டையோ அவருடைய ஆதரவாளரையோ எந்த பதவிக்கும் தேர்வு செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட மூன்று நிபந்தனைகளை விதித்து உள்ளனர். இந்த நிபந்தனைகளை தீர்மானமாக நிறைவேற்ற மேலிட பார்வையாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தனர். இது ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் அரசியல் புயலாக மாறியது. 75 ஆண்டு கால காங்கிரஸ் வரலாற்றில் இப்படி ஒரு புயல் இதுவரை வீசி இல்லாத நிலையில் இது மேலிட பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் டெல்லிக்கு திரும்பி சென்று சோனியா காந்தியை சந்தித்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் புயல் பற்றி விளக்கி கூறினார்கள். இது தொடர்பாக அவர்கள் சோனியாவிடம் எழுத்துப்பூர்வமான அறிக்கையும் கொடுத்துள்ளனர்.அசோக் கெலாட் ஆதரவாளர்கள் நடந்து கொண்ட விதம் சோனியாவிற்கு அவர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் நிகழ்வின் பின்னணியில் அசோக் கெலாட் இருப்பதாக சோனியா காந்தி கருதி அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன் கார்கே, கமல் நாத்,திக் விஜய் சிங், சுசில்குமார் ஷிண்டே, முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா ஆகியோரில் யாராவது ஒருவரை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தலாம் என சோனியா காந்தி முடிவு செய்து இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ராவை தொடங்கிய போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. அந்த கருத்து என்னவென்றால் மதிப்பிற்குரிய ராகுல் காந்தி முதலில் தனது கட்சி தலைவர்களிடம் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்தட்டும் அதன் பின்னர் அவர் தேச ஒற்றுமை நடை பயணத்தை தொடங்குவது பற்றி யோசிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. அவர்கள் கூறியதை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் புயல் பாரத் ஜோடோ யாத்ராவை பின்னுக்கு தள்ளி ராகுல் காந்திக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் யாத்ராவை முடிப்பதற்குள் இன்னும் என்னென்ன குழப்பங்கள், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுவிடுமோ தெரியவில்லை .

அந்த அளவிற்கு காங்கிரஸ் கட்சியில் பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற காஷ்மீர் மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்கி விட்டார்.இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் பின்னடைவு, கோஷ்டி பூசல்கள் வலுவான ஒரு தலைமை இல்லாததையே மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் ராகுல் காந்தி எவ்வாறு சமாளித்து வெற்றி பாதையில் பயணிக்க போகிறார் என தெரியவில்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!