முன்பதிவில்லா பயணிகளுக்கு பழைய ஏசி கோச்கள்! நரக வேதனையில் பயணம்
லால் பாக் விரைவு வண்டி - கோப்புப்படம்
குளிர்சாதன ரயில் பெட்டியாக பயன்படுத்த முடியாத பழைய ஏசி இருக்கை வசதிகொண்ட பெட்டிகளை விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றும் இந்திய ரயில்வேயின் திட்டம், பயணிகளுக்கு மிகப்பெரிய தொந்தரவாக மாறியிருக்கிறது.
மைசூரு சூப்பர்ஃபாஸ்ட் மற்றும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில்களின் ஜெனரல் கோச் பெட்டிகளாக இணைக்கப்பட்ட பழைய ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள், போதிய காற்றோட்டம் இன்றி, வியர்வையில் குளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழைய சாதாரண வகுப்பு ரயில் பெட்டிகள் பெரிய ஜன்னல்களுடன் நல்ல காற்றோட்டம் இருக்கும். ஆனால், ஏசி இருக்கை வசதிப் பெட்டிகளில் ஜன்னல்களுக்கு பதில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் இருப்பதால் கூட்டம் நிரம்பி வழியும்போது, மூச்சுவிடக் கூட முடியாமல் இருப்பதாக பயணிகள் புலம்புகிறார்கள்.
லால்பாக் விரைவு ரயிலுக்குள் ஏறிய 15 நிமிடங்களுக்குள் பயணிகள் வியர்வை மழையில் நனைந்துவிடலாம் என்கிறார்கள் அடிக்கடி அதில் பயணிக்கும் பயணிகள்.
கூட்டம் அதிகம் இருக்கும் வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறைக் காலங்களில் பயணிக்கும்போது, பயணிகளுக்கு நரகமாக இருக்கும். இருக்கைகளுக்கு இடையில் கூட மக்கள் நின்றுகொள்ளும் நிலை ஏற்படும்போது, அமர்ந்திருப்பவர்களால் மூச்சுவிடக் கூட முடியாமல் ஆகிறது என்கிறார்கள் பயணிகள்.
சென்னை - பெங்களூரு வழித்தடத்தில் இரண்டு இன்டர்சிட்டி ரயில்கள், ஒரு வந்தே பாரத், 2 சதாப்தி ரயில்கள், இரண்டு இரவு நேர ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக, பெரம்பூர் - பெங்களூரு இடையே ஐந்து முதல் ஆறு வாராந்திர ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆண்டு முழுவதும், லால்பாக் மற்றும் மைசூரு விரைவு ரயில்களில் 120 சதவீத பயணிகளுடன் பயணிக்கும்.
இந்த முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிப்பது என்பது கொடுங்கனவாக இருக்கும்.. இது சாதாரண வகுப்பு பயணிகளின் நலனில் ரயில்வே அக்கறை காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. பொது வகுப்புப் பெட்டிகளில் நிற்கக் கூட இடமில்லாத நிலையில்தான், பயணிகள் பலரும் முன்பதிவு செய்த பெட்டிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்,
இது குறித்து சென்னை ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இது குறித்து கவனம் செலுத்தப்படும், விரைவாக சிக்கல் சரிசெய்யப்படும் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu