எல்லாம் டிஜிட்டல் மயம்: தெற்கு ரயில்வேயின் 543 ஸ்டேஷன்களில் வைஃபை வசதி
சித்தரிப்பு படம்
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, ரயில்வே நிர்வாகம், ரயில்டெல் மூலம் முக்கிய ரயில்வே நிலையங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்காக உயர் ஆப்டிகல் வைஃபர் கேபிள் மூலம், உயர் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டு இணைய இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில், தெற்கு ரயில்வேயில் 5, 087 கிலோமீட்டர் வழித்தடங்களை சுற்றியுள்ள 543 ரயில் நிலையங்களில் அதிவேக வைஃபை இணைய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், சென்னை கோட்டத்தில் 135 ரயில் நிலையங்களிலும், திருச்சி கோட்டத்தில் 105 ரயில் நிலையங்களிலும், சேலம் கோட்டத்தில் 79 ரயில் நிலையங்களிலும், மதுரை கோட்டத்தில் 95 ரயில் நிலையங்களிலும், பாலக்காடு கோட்டத்தில் 59 ரயில் நிலையங்களிலும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 70 ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், சேலம், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் இதில் அடங்கும்.
எப்படி பயன்படுத்துவது?
ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், எப்படி இந்த வைஃபை வசதியை பயன்படுத்துவது? இது மிகவும் சுலபம் தான். முதலில் ரயில் நிலையம் செல்லும் பயணிகளில், அவர்களது ஸ்மார்ட்போனில் வைஃபை வசதியை ஆன் செய்ய வேண்டும். அதில் தோன்று, RailWire என்ற வைஃபை-யை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து சம்பந்தப்பட்ட இணையதளப் பக்கம் திறக்கும். அங்கு நமது மொபைல் எண்ணை பதிவு செய்தால் ஓடிபி வரும். அதைக் கொண்டு ரிஜிஸ்டர் செய்தால் வைஃபை இணைப்பு கிடைத்துவிடும்.
எனினும், முற்றிலும் இலவசமாக இச்சேவை கிடைக்காது. ஒவ்வொரு நாளும் ஒரு எம்.பி.பி.எஸ் வேகத்தில், முதல் 30 நிமிடங்களுக்கு மட்டும் இலவசமாக இணையச் சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கு மேல் இணையச் சேவையை பயன்படுத்த, அல்லது இணைய வேகத்தை அதிகப்படுத்த, அதற்கான கட்டணத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய வேண்டும்.
கட்டண விவரம்
நாள் ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் முதல் 30 நாட்களுக்கு 75 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி திட்டங்களை தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் 34 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 5 ஜிபி முதல் 60 ஜிபி வரை இணையச் சேவையை பெறலாம். வாடிக்கையாளர்கள் தங்களது தேவைக்கு ஏற்ப திட்டங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.
ரயில் நிலையங்களில் வைஃபை வசதி கிடைப்பது குறித்து, ரயில் பயணிகளுக்கு, நிர்வாகம் தரப்பில் விழிப்புணர்வும், விளம்பரமும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியான செய்திகள், சமூக வலைதளங்களில் இதுகுறித்த வீடியோக்கள் மூலம், இந்த வைஃபை திட்டம் குறித்து, விளம்பரம் செய்து வருவதாக, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu