எரிபொருள் விலையேற்றம் பிரதமருக்கு பொறுப்பு இல்லை:ராகுல் காந்தி காட்டம்

எரிபொருள் விலையேற்றம் பிரதமருக்கு பொறுப்பு இல்லை:ராகுல் காந்தி காட்டம்
X
எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் மீதே பழி - பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, நாட்டில் தற்போது அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்திருக்கிறது.

மாநில அரசுகளும் இதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தோம். இதன் அடிப்படையில் சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளன. ஆனால், மத்திய அரசின் வார்த்தைக்குச் செவி சாய்க்காத சில மாநிலங்கள், மத்திய அரசின் கோரிக்கையான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

எனவே, உங்களால் முடியுமானால் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறையுங்கள். ஏனென்றால், மத்திய அரசு மீது சில மாநில அரசுகள் தொடர்ச்சியாக விலை உயர்வு தொடர்பான குற்றச்சாட்டை முன்வைக்கின்றன." என்றார்.

இதற்கு பல்வேறு மாநில அரசுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. முழுப்பூசணிக்காயை சோற்றிலே மறைப்பது போல், பிரதமர் இந்தக் கருத்தை சொல்லியிருப்பதாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். இதுபற்றி பேரவையில் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விரிவாக விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், எரிபொருள் விலையேற்றம், நிலக்கரி, ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு மாநில அரசுகள் மீதே பிரதமர் மோடி பழி போடுகிறார். மொத்த எரிபொருள் வரிகளில் 68 சதவீத வரியை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. எனினும் பொறுப்பான பதில்களை கூற மறுக்கிறார் பிரதமர் மோடி. அவரது கூட்டாட்சி முறை அனைவருக்கும் சமமானதாக இல்லை. மாறாக அனைவரையும் கட்டாயப்படுத்துகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "உயர்ந்த எரிபொருள் விலை - மாநில அரசே காரணம்; நிலக்கரிப் பற்றாக்குறை - மாநில அரசே காரணம்; ஆக்சிஜன் பற்றாக்குறை - மாநில அரசே காரணம். எரிபொருள் விலையில் மத்திய அரசின் பங்கு 68%. ஆனால் பிரதமர் பொறுப்பேற்க மறுக்கிறார். மோடியின் கூட்டாச்சியில் இருப்பது ஒத்துழைப்பு அல்ல, கட்டாயம்." என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!