குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000: முதல்வர் அறிவிப்பு
புதுவை மாநிலத்தில் 2022-23 ஆம் நிதியாண்டிற்கு ரூ.11 ஆயிரம் கோடியில் பட்ஜெட் தயாரிக்க மாநில திட்டக்குழு தலைவரான ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்த திட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் இதற்கான கோப்புகள் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. அன்றைய நிலையில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் கவர்னர் உரையுடன் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே முதலமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியதையடுத்து புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதைத்தொடர்ந்து புதுவை சட்டசபை இன்று காலை 9.45 மணிக்கு மீண்டும் கூடியது. கூட்டத்தை சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
அதன்பின் நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி (2022-23 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
இலவச மடிக்கணினி அதேநேரத்தில் விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், குடும்ப தலைவிகளுக்கு சலுகைகள் தாராளமாக வழங்கப்பட்டது.
முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
- புதுவை மாநிலத்தில் 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் அரசின் எந்தவிதமான மாதாந்திர உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும்.
- ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவ காப்பீடு திட்டம் வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ள குடும்பங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
- நிலுவையிலுள்ள முதியோர் ஓய்வூதிய விண்ணப்பங்கள் அனைத்துக்கும் ஓய்வூதியம் வருகின்ற மாதங்களில் வழங்கப்படும். பணி நிரந்தரம்
- அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்.
- 75வது சுதந்திர தினத்தையொட்டி தியாகிகளை கவுரவிக்கும் வகையில் 260 தியாகிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்படும்.
- அனைத்து துறைகளிலும் இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் காலிப்பணியிடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிரப்பப்படும்.
முதலமைச்சர் ரங்கசாமி காலை 9.45 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கி 11 மணிக்கு தனது உரையை முடித்துக்கொண்டார். எதிர்க்கட்சிகளின் எந்தவித இடையூறும் இன்றி முதல்-அமைச்சர் ரங்கசாமி வாசித்து முடித்தார். ஒவ்வொரு அறிவிப்புகள் வெளியிடும்போதும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu