ஈரான் அதிபருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு
பிரதமர் மோடி.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஈரான் அதிபர் திரு செய்யது இப்ராஹிம் ரைசியுடன் இன்று (06-11-2023) தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் சிக்கலான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
பயங்கரவாத சம்பவங்கள், வன்முறைகள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால மற்றும் நிலையான நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரான் அதிபர் ரைசி நிலைமை குறித்த தனது மதிப்பீட்டை பகிர்ந்து கொண்டார்.
பதற்றத்தைத் தணிப்பது, தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை உறுதி செய்வது, அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பது ஆகியவற்றின் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
பல்வேறு அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் தலைவர்கள் ஆய்வு செய்து மதிப்பிட்டனர். பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள கவனத்தையும் முன்னுரிமையையும் அவர்கள் வரவேற்றனர்.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இருதரப்புக்கும் உள்ள ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து தொடர்பில் இருக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu