குடிமைப்பணிகள் தினத்தன்று பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியை நாளை தொடங்கி வைக்கிறார். நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையும், ஊழியர் நலன் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகமும் 2022 ஏப்ரல் 20, 21 தேதிகளில் இரண்டு நாள் குடிமைப் பணிகள் தின நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த ஆண்டு தெரிவு செய்யப்பட்ட 5 முன்னுரிமை திட்டங்களுக்கு 10 விருதுகளும், புதிய கண்டுபிடிப்புகளுக்காக மத்திய / மாநில அரசுகள் / மாவட்டங்களின் அமைப்புகளுக்கு 6 விருதுகளும் வழங்கப்படவுள்ளன. நாளை (ஏப்ரல் 20) நடைபெறவுள்ள தொடக்க நிகழ்வில், அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை விருந்தினராக பங்கேற்பார்.
2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட முன்னுரிமை திட்டங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்ட விருதுகளுக்கான முன்முயற்சிகள் குறித்த கண்காட்சியை டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைப்பார். இதைத் தொடர்ந்து, இரண்டு கருத்தரங்கு அமர்வுகள் நடைபெறும். 'தொலைநோக்கு இந்தியா @ 2047- நிர்வாகம்' என்ற அமர்வுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமை தாங்குவார். 'தற்சார்பு இந்தியா-ஏற்றுமதிகள் மீதான கவனம்' என்ற 2-ஆவது அமர்வுக்கு மத்திய தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ்கோயல் தலைமை வகிப்பார்.
ஏப்ரல் 21 குடிமைப்பணிகள் தினத்தன்று பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி விருதுகளை வழங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, வெற்றிக் கதைகள் அடங்கிய முன்னுரிமை திட்டங்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த மின்னணு புத்தகத்தை பிரதமர் வெளியிடுவார். மேலும், விருதுபெறும் முன்முயற்சிகள் குறித்த திரைப்படமும் திரையிடப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu