இந்தியா- பங்களாதேஷ் சப்ரூம் தரைவழி துறைமுகத்தை தொடங்கி வைத்த பிரதமர்

இந்தியா- பங்களாதேஷ் சப்ரூம் தரைவழி துறைமுகத்தை தொடங்கி வைத்த பிரதமர்
X
இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்துக்காக சப்ரூம் தரைவழி துறைமுகத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்துக்காக சப்ரூம் தரைவழி துறைமுகத்தை தொடங்கி வைத்தார்.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் இன்று நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்குப் பகுதிகள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் ரூ. 55,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் பல புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சேலா சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர், சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான உன்னதி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில்வே, சாலை, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி, எல்லை உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளை உள்ளடக்கியதாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி தேசிய திருவிழாவாக நடைபெற்று வருவதை குறிப்பிட்டார். வளர்ச்சி அடைந்த வடகிழக்கு பகுதி என்ற கருத்துக்கு வடகிழக்குப் பகுதி மக்களிடையே புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் மகளிர் சக்தியும் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்குப் பகுதியின் வளர்ச்சிக்கான தமது தொலைநோக்குப் பார்வையான அஷ்டலட்சுமி திட்டத்தை மீண்டும் எடுத்துரைத்த பிரதமர், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுடன் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கலாச்சார உறவுகளின் வலுவான இணைப்பாக இந்த மண்டலம் திகழ்கிறது என்றார். இன்றைய ரூ. 55,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 35,000 குடும்பங்கள் உறுதியான வீடுகளைப் பெற்றுள்ளன என்றார். அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் மற்றும் இப்பிராந்தியத்தின் பல மாநிலங்களுக்கு போக்குவரத்து இணைப்பு தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார். இந்த கல்வி, சாலை, ரயில்வே, உள்கட்டமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் சுற்றுலா திட்டங்கள் வளர்ச்சி அடைந்த வடகிழக்கு என்ற உத்தரவாதத்துடன் வந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் இந்தப் பகுதிக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய காலங்களை விட நான்கு மடங்கு அதிகம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களை மனதில் கொண்டு மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பு இயக்கமான பாமாயில் இயக்கத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த இயக்கத்தின் கீழ் முதலாவது எண்ணெய் ஆலை இன்று தொடங்கி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். "பாமாயில் இயக்கம் சமையல் எண்ணெய் துறையில் இந்தியாவை தற்சார்பு உடையதாக மாற்றும் என்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும்" என்றும் பிரதமர் கூறினார்.

இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மூலம் மோடியின் உத்தரவாதத்தை ஒட்டுமொத்த வடகிழக்கு பகுதியும் காணும் என்று பிரதமர் தெரிவித்தார். 2019-ம் ஆண்டு சேலா சுரங்கப்பாதை மற்றும் டோனி போலோ விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியதையும் அவர் நினைவு கூர்ந்தார். எந்த நேரமாக இருந்தாலும், மாதமாக இருந்தாலும், எந்த வருடமாக இருந்தாலும், மோடி தேசத்தின் நலனுக்காகவும், மக்களின் நலனுக்காக மட்டுமே பணியாற்றுவதாக அவர் கூறினார்.

வடகிழக்கின் தொழில்துறை மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்திற்கு புதிய வடிவத்திலும், விரிவாக்கப்பட்ட நோக்கத்திலும் அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டம் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டு, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். இது அரசின் செயல்பாட்டு வேகத்தைக் குறிப்பதாக அவர் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில் நவீன உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வடகிழக்குப் பகுதியில் சுமார் 12 அமைதி ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்பட்டது என்றும் எல்லைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்தில் தொழில்துறையை விரிவுபடுத்துவதும் ரூ.10,000 கோடி மதிப்பிலான உன்னதி திட்டம் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான புதிய வாய்ப்புகளை கொண்டு வரும் என்று அவர் கூறினார். புத்தொழில் நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களுக்கு சுற்றுலா தொடர்பான வாய்ப்புகள் போன்றவை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

வடகிழக்கில் உள்ள பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று எரிவாயு சிலிண்டர் விலைகள் ரூ.100 குறைக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். மக்களுக்கு குழாய் நீர் இணைப்புகள் கிடைக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க பணிக்காக அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் மற்றும் மாநில அரசின் ஒட்டுமொத்த குழுவினரையும் அவர் பாராட்டினார். பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் முன்னணியில் இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், வளர்ச்சிப் பணிகள் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளை சூரியனின் முதல் கதிர்களைப் போல சென்றடைகின்றன என்றார். மாநிலத்தில் 45,000 வீடுகளுக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அம்ரித் சரோவர் இயக்கத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு நீர்நிலைகள் சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் கிராமங்களில் லட்சாதிபதி மகளிரை உருவாக்கியதையும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் 3 கோடி லட்சாதிபதி மகளிரை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

எல்லைப்புற கிராமங்களின் வளர்ச்சி முன்பு புறக்கணிக்கப்பட்டதை பிரதமர் விமர்சித்தார். சேலா சுரங்கப்பாதை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், தேர்தல் காரணங்களுக்காக அல்லாமல், நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப பணியாற்றும் தமது திட்டத்தை அவர் மீண்டும் குறிப்பிட்டார். தமது அடுத்த பதவிக்காலத்தில் சேலா சுரங்கப்பாதை பொறியியல் அற்புத நிகழ்வில் பணியாற்றியவர்களை சந்திக்க வருவதாக பாதுகாப்பு வீரர்களிடம் உறுதியளித்தார். இந்த சுரங்கப்பாதை அனைத்து பருவநிலைகளுக்கும் ஏற்ப போக்குவரத்து இணைப்பை வழங்குவதோடு, தவாங் மக்களின் பயணத்தை எளிதாக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இப்பகுதியில் பல சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

முந்தைய அணுகுமுறைகளைப் போலல்லாமல், எல்லையோர கிராமங்களை 'முதல் கிராமங்கள்' என்று தாம் எப்போதும் கருதுவதாகவும், துடிப்பான கிராமத் திட்டம் இந்த சிந்தனையின் அங்கீகாரம் என்றும் அவர் கூறினார். இன்று, சுமார் 125 கிராமங்களுக்கான சாலைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் 150 கிராமங்களில் சுற்றுலா தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் பின்தங்கிய பழங்குடியினரின் பிரச்சினைகள் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் தீர்க்கப்படுகின்றன என்று அவர் கூறினார். அத்தகைய பழங்குடியினருக்காக மணிப்பூரில் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து இணைப்பு மற்றும் மின்சாரம் தொடர்பான வளர்ச்சிப் பணிகள் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கும் வழிவகுக்கின்றன என்பதை பிரதமர் சுட்டிக் காட்டினார். நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 2014-ம் ஆண்டு வரை போக்குவரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகளையும், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பணிகளையும் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் 6,000 கிலோ மீட்டர் நீளத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மின்சாரத் துறையைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசத்தில் திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டம் மற்றும் திரிபுராவில் சூரிய மின்சக்தித் திட்டம் ஆகியவற்றில் இன்று பணிகள் தொடங்கப்படுவதை பிரதமர் குறிப்பிட்டார். திபாங் அணை இந்தியாவின் மிக உயரமான அணையாக இருக்கும் என்று கூறிய அவர், மிக உயரமான பாலம் மற்றும் மிக உயர்ந்த அணையை வடகிழக்குப் பகுதியில் அர்ப்பணித்ததைக் குறிப்பிட்டார்.

அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான பயணங்கள் உட்பட இன்றைய தமது பயண அட்டவணை குறித்தும் பிரதமர் விவரித்தார். ஒவ்வொரு இந்தியரும் தமது குடும்பம் என்று பிரதமர் கூறினார். உறுதியான வீடு, இலவச உணவு தானியம், தூய்மையான குடிநீர், மின்சாரம், கழிப்பறைகள், எரிவாயு இணைப்பு, இலவச சிகிச்சை மற்றும் இணைய இணைப்பு போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் வரை தான் ஓயமாட்டேன் என்று பிரதமர் மக்களுக்கு உறுதியளித்தார். உங்கள் கனவுகளே எனது தீர்மானங்கள் என்று கூறிய அவர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்திற்கும் பாராட்டுத் தெரிவித்து அவர் தமது உரையை நிறைவு செய்தார்.

அருணாச்சலப் பிரதேச ஆளுநர் கைவால்யா திரிவிக்ரம் பர்நாயக், அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ரயில்வே, சாலை, சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி, எல்லை உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் பல்வேறு வளர்ச்சி முயற்சிகளை இட்டாநகரில் வளர்ச்சி அடைந்த பாரதம் வளர்ச்சி அடைந்த வடகிழக்கு நிகழ்ச்சியில் பிரதமர் தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, வடகிழக்கு மாநிலங்களுக்கான புதிய தொழில் மேம்பாட்டுத் திட்டமான உன்னதி என்ற திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் வடகிழக்குப் பகுதியில் தொழில் சூழலை வலுப்படுத்தி, புதிய முதலீடுகளை ஈர்த்து, புதிய உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளை அமைக்க உதவுவதுடன், வடகிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்புக்கு ஊக்கமளிக்கும். ரூ.10,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் 8 வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலதன முதலீட்டிற்கு ஊக்கத்தொகை, வட்டி மானியம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தொழில்களுக்கு உற்பத்தி மற்றும் சேவைகளுடன் இணைந்த ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கும். தகுதியான தொழில் பிரிவுகளை எளிதாகவும் வெளிப்படையாகவும் பதிவு செய்வதற்காக ஒரு இணையதளமும் தொடங்கப்படுகிறது. வடகிழக்கு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உன்னதி உதவும்.

சுமார் 825 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சேலா சுரங்கப்பாதை திட்டம் ஒரு பொறியியல் அற்புதம் ஆகும். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பலிபாரா – சாரிதுவார் – தவாங் சாலையில் சேலா கணவாய் வழியாக தவாங்கிற்கு அனைத்து பருவநிலைகளிலும் போக்குவரத்து இணைப்பை வழங்கும். இது மிக உயர்ந்த தர பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியது.

அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ.41,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் திபாங் பல்நோக்கு நீர்மின் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ. 31,875 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்படவுள்ள இது நாட்டின் மிக உயரமான அணை கட்டமைப்பாக இருக்கும். இது மின்சாரத்தை உற்பத்தி செய்து, வெள்ளத்தை குறைக்க உதவுவதுடன், இப்பகுதியில் வேலைவாய்ப்புகள் மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அடிக்கல் நாட்டப்பட்ட பிற முக்கியமான திட்டங்களில் 'துடிப்பான கிராமத் திட்டத்தின்' கீழ் பல சாலை, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா திட்டங்கள் அடங்கும்; 50 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் முழுமையான கல்வி வழங்கப்படும்; டோன்யி-போலோ விமான நிலையத்திலிருந்து நஹர்லாகுன் ரயில் நிலையம் வரை இணைப்பை வழங்க இருவழி சாலை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அருணாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு சாலைத் திட்டங்கள் உட்பட பல்வேறு முக்கியத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்; ஜல் ஜீவன் இயக்கத்தில் சுமார் 1100 திட்டங்கள் தொடங்கப்பட்டன. 170 தொலைத் தொடர்பு கோபுரங்கள் 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பயனளிக்கும். பிரதமரின் வீட்டு வசதித் (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) திட்டத்தின் கீழ் ரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட 35,000 க்கும் மேற்பட்ட வீடுகளையும் பயனாளிகளுக்குப் பிரதமர் வழங்கினார்.

மணிப்பூரில் ரூ. 3,400 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட முக்கியமான திட்டங்களில் நிலக்குடியில் யூனிட்டி மால் கட்டுமானம்; மந்திரிப்புக்ரியில் மணிப்பூர் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் செயலாக்க மண்டலத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு; சிறப்பு மனநல பராமரிப்பை வழங்க லாம்ப்ஜாஹெல்பட்டில் 60 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை கட்டுமானம்; மற்றும் மேற்கு இம்பால் மாவட்டத்தில் மணிப்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கான உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை அடங்கும். மணிப்பூரில் பல்வேறு சாலைத் திட்டங்கள், பல்வேறு குடிநீர் விநியோகத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நாகாலாந்தில் ரூ.1700 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட முக்கியமான திட்டங்களில் பல சாலை திட்டங்கள் அடங்கும்; சுமுகெடிமா மாவட்டத்தில் யூனிட்டி மால் கட்டுமானம்; மற்றும் திமாப்பூரில் உள்ள நாகர்ஜனின் 132 கிலோவோல்ட் துணை மின் நிலையத்தில் திறன் மாற்றத்தை மேம்படுத்துதல். செண்டாங் சேடில் முதல் நோக்லாக் வரையிலான சாலை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கோஹிமா-ஜெஸ்ஸாமி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைத் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேகாலயாவில் ரூ.290 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். துராவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நியூ ஷில்லாங் டவுன்ஷிப்பில் புதிய நான்கு வழிச்சாலையை நிர்மாணித்தல் மற்றும் தற்போதுள்ள இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுதல், மேல் ஷில்லாங்கில் விவசாயிகள் விடுதி மற்றும் பயிற்சி மையம் ஆகிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.

சிக்கிமில் ரூ. 450 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரங்போ ரயில் நிலையத்தை மறுமேம்பாடு செய்தல் மற்றும் பல்வேறு சாலைத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். சிக்கிமில் தார்பு மற்றும் தரம்தீனை இணைக்கும் புதிய சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

திரிபுராவில் ரூ.8,500 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டப்பட்ட முக்கியமான திட்டங்களில் அகர்தலா மேற்கு பைபாஸ் கட்டுமானம் மற்றும் மாநிலம் முழுவதும் பல சாலை திட்டங்கள் அடங்கும்; சேகர்கோட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் புதிய பணிமனை கட்டப்படும்; மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையம் கட்டுதல். மாநிலத்தில் பல்வேறு சாலை திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். 1.46 லட்சம் கிராமப்புற செயல்பாட்டு வீட்டு குழாய் இணைப்புகளுக்கான திட்டம்; மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள சப்ரூமில் சுமார் ரூ. 230 கோடி செலவில் கட்டப்பட்ட நில துறைமுகம் ஆகியவற்றுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட சப்ரூம் நில துறைமுகம் இந்தியாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான சர்வதேச எல்லையில் அமைந்துள்ளது. இத்துறைமுகத்தில் பயணிகள் முனையக் கட்டிடம், சரக்கு நிர்வாகக் கட்டிடம், பண்டகசாலை, தீயணைப்பு நிலையக் கட்டடம், துணை மின் நிலையம், நீரேற்று நிலையம் போன்ற வசதிகள் அமையும். 1700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு வங்கத்தின் கொல்கத்தா / ஹால்டியா துறைமுகத்திற்கு செல்வதற்கு பதிலாக, புதிய துறைமுகத்தின் வழியாக 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திற்கு நேரடியாக செல்ல முடியும் என்பதால், இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து வலுப்படும். 2021 மார்ச் மாதம் சப்ரூம் நில துறைமுகத்துக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி