குடியரசு தின விழாவில் 901 காவல்துறையினருக்கு காவல் பதக்கங்கள்
பைல் படம்
குடியரசு தினத்தின் போது மொத்தம் 901 காவல்துறையினருக்கு பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. துணிச்சலுக்கான காவல்துறைப் பதக்கம் (பி.எம்.ஜி) 140 பேருக்கும், சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் (பிபிஎம்) 93 பேருக்கும், சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் (பிஎம்) 668 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணிச்சலுக்கான விருது பெற்ற 140 பேரில், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்து 80 வீரர்களும், ஜம்மு & காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த 45 வீரர்களும் தங்கள் துணிச்சலான நடவடிக்கைக்காக இவ்விருதைப் பெறவுள்ளனர். இவ்விருதைப் பெறவுள்ளவர்களில், 48 பேர் சிஆர்பிஎஃப், 31 பேர் மகாராஷ்டிரா, 25 பேர் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை, 9 பேர் ஜார்க்கண்ட், டெல்லி, சத்தீஸ்கர் மற்றும் பிஎஸ்எஃப்-ல் இருந்து 7 பேர், மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள்/ யூனியன் பிரதேச காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உயிர்களையும், சொத்துக்களையும் காப்பாற்றுவதில் துணிச்சலாக செயல்படுபவர்களுக்கும், குற்றங்களைத் தடுப்பது அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதில் துணிச்சலாக செயல்படுபவர்களுக்கும் துணிச்சலுக்கான காவல்துறைப் பதக்கம் வழங்கப்படுகிறது. காவல்துறைச் சேவையில் சிறந்து விளங்குவோருக்கு குடியரசுத் தலைவரின் காவல் பதக்கம் வழங்கப்படுகிறது. சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் கடமையில் அர்ப்பணிப்போடு செயல்படுவோருக்கு வழங்கப்படுகிறது.
தீயணைப்பு, ஊர்க்காவல் படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள்
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தீயணைப்புத் துறை, உள்நாட்டு பாதுகாப்புப் படை, ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கும், சிறப்பாகவும் பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றியவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
குடியரசு தினத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 47 பேருக்கு பதக்கங்கள்வழங்கப்படுகின்றன. இவர்களுள் இருவருக்கு வீரதீர செயல் புரிந்ததற்கான விருது வழங்கப்படுகிறது.
7 பேருக்கு சிறப்பு செயல்களுக்கான விருதுகளும், 38 பேருக்கு போற்றத்தக்க வகையில் செயல்பட்டதற்கான குடியரசுத் தலைவரின் தீயணைப்புத் துறை பதக்கங்களும் வழங்கப்படுகின்றன.
இது தவிர குடியரசு தினத்தை முன்னிட்டு உள்நாட்டு படை மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 55 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் ஒருவருக்கு வீரதீர செயலுக்கான விருது வழங்கப்படுகிறது.
ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கான குடியரசுத் தலைவரின் பதக்கமும் சிறந்த சேவைக்கான பதக்கமும் முறையே 9 மற்றும் 45 பேருக்கு வழங்கப்படுகிறது.
வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள்
வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சிறப்பான சேவையைப் பாராட்டி குறிப்பாக அச்சுறுத்தல்களை கடந்து துணிவுடன் பணியாற்றும் சேவையை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வருவாய்த் துறையின் மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்தின் 29 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டலத்தில் இடம் பெற்றுள்ள கோவை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி) கண்காணிப்பாளர் ஜே ஃபெட்ரிக் சர்குரு தாஸ், சென்னை மண்டல பிரிவைச் சேர்ந்த வருவாய்ப் புலனாய்வுத் துறை இயக்குநரகத்தின் மூத்தப் புலனாய்வுத் துறை அதிகாரி ஏ முரளி, கோவை சிஜிஎஸ்டியின் முதன்மை ஆணையர் அலுவலக ஆய்வாளர் வி மகேந்திரன் உள்ளிட்ட 29 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு குடியரசு தினவிழாக் கொண்டாட்டத்தின் போது விருதுகள் வழங்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu