ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அசத்திய அரசுப் பள்ளி மாணவி

ஒருநாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அசத்திய அரசுப் பள்ளி மாணவி
X

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவி ஐஸ்வர்யா ஒருநாள் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுச்சேரியை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவர் ஒருநாள் ஆட்சியராக பொறுப்பேற்று அசத்தினார்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மக்கள் பணிகள் செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணி இன்று தொடங்கியது.

அதன்படி, புதுச்சேரி கதிர்காமம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 வகுப்பு மாணவி ஐஸ்வர்யா இன்று ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணிக்கு அமர்த்தபட்டார். மாணவி ஐஸ்வர்யா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றவுடன் அவருக்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வரவேற்று அவரது இருக்கையில் அமர வைத்து அலுவல் பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும், தினந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகள் மற்றும் புகார் மனுக்களை எப்படி கையாள்வது என்பது குறித்தும் மனுக்களை கொடுக்க வரும் பொது மக்களிடம் எப்படி கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மாணவி ஐஸ்வர்யாவுக்கு விளக்கம் அளித்தார்.


அதைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியருடன் காரில் புறப்பட்டுச் சென்ற ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யா புதுச்சேரியில் செயல்படுத்தப் பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சட்டப்பேரவை அலுவலகம் வந்து ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் ஐஸ்வர்யாவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் சால்வை அணிவித்து வரவேற்று நினைவுப் பரிசு வழங்கினார். தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள சட்டசபை மைய மண்டபத்திற்கு சென்று அங்கே நடைபெறும் சட்டசபை நிகழ்வுகள் குறித்தும் முதலமைச்சர் அமரும் இடம் எதிர்க்கட்சித் தலைவர் அமரும் இடம் ஆகியவைகள் குறித்தும் சட்டப்பேரவை தலைவர் செல்வம் விளக்கி கூறினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரசு செயல்படுத்தும் மக்கள் நலப்பணிகள் குறித்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்சியருடன் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று மாணவி ஐஸ்வர்யாவுக்கு ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியமர்த்தப்பட்டு பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் பணி மேலும் தொடரும் என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ஒரு நாள் மாவட்ட ஆட்சியரான மாணவி ஐஸ்வர்யா கூறும்போது:

ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று பணிபுரிந்தது மறக்க முடியாத நிகழ்வு. சாதாரண பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்தும், நில அபகரிப்புகள் புகார்கள் குறித்தும், ஸ்மார்ட் சிட்டி சம்பந்தமாக பணிகளை ஆய்வு செய்தேன்.

தொடர்ந்து நன்றாக படித்து மாவட்ட ஆட்சியராகி மக்கள் பணி செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம். ஏதோ மாவட்ட ஆட்சியர் என்றால் கையெழுத்திடுவது மட்டும் அவருடைய வேலை அல்ல. நிறைய மக்கள் பணி உள்ளது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

மேலும், மக்களிடம் எவ்வாறு கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாவட்ட ஆட்சியரை பார்த்து தான் அறிந்து கொண்டேன் என மாணவி ஐஸ்வர்யா தெரிவித்தார்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil