மணிப்பூர் இனக்கலவரத்தில் குறிவைக்கப்படும் அரசியல்வாதிகள்

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தில் இடஒதுக்கீடு விவகாரத்தில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 3-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்கும் மேலாக வன்முறை, கலவரம் நீடிக்கிறது. இதில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தின் மக்கள் தொகையில் 53 சதவீதம் பேர் இருக்கும் மைதேயி சமூக மக்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் பற்றி எரிந்தது.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கு 11 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் மாநிலத்தில் கலவரக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் நடந்து வருகிறது.
வடகிழக்கு மாநிலத்தில் நடந்து வரும் இந்த இனமோதல்களின் பல்வேறு சம்பவங்களில் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் அடையாளம் தெரியாத கும்பல்களால் தாக்கும், தீவைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இந்தச் சம்பவத்தில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மணிப்பூர் அமைச்சரவையில் இருக்கும் ஒரே பெண் அமைச்சரான நெம்சா கிப்ஜெனின் அதிகாரபூர்வ இல்லம் அடையாளம் தெரியாத வன்முறையாளர்களால் தீவைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அவர் வீட்டில் இல்லை.
பொதுப்பணித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை அமைச்சர் கோவிந்தாஸ் கொண்டதவுஜனின் இம்பாலில் உள்ள வீடு வன்முறையாளர்களால் தாக்கப்பட்டது. மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான இவரது வீடு 100 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்ட போது அமைச்சர் குடும்பத்துடன் வெளியில் இருந்தார்.
இதற்கு அடுத்த நாள் மற்றொரு மாநில அமைச்சர் டி. பிஸ்வாஜித் சிங்-ன் இம்பால் வீடு வன்முறைக்கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டது.
பாஜக எம்எல்ஏ வுங்ஜாகின் வால்டே, மாநில முதல்வர் பிரேன் சிங் தலைமையில் நடந்த உயர்நிலை கூட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வன்முறைக்கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டார். அந்த தாக்குதலில் எம்எல்ஏ படுகாயமடைந்தார். தற்போது அவர் டெல்லியில் சிசிச்சை பெற்று வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu