பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சியை பார்வையிட்ட பிரதமர்

பொக்ரானில் முப்படைகளின் பாரத் சக்தி பயிற்சியை பார்வையிட்ட பிரதமர்
X
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் முப்படைகளின் 'பாரத் சக்தி' பயிற்சியை பிரதமர் பார்வையிட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று முப்படைகளின் நேரடி பயிற்சியின் வடிவத்தில் உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களை ஒருங்கிணைத்து செய்யப்பட்ட செயல் விளக்கத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

நாட்டின் தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்ட நாட்டின் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் 'பாரத் சக்தி' உள்நாட்டு ஆயுத அமைப்புகள் மற்றும் தளங்களின் வரிசையைக் கொண்டிருக்கும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ள வீரம் மற்றும் திறன்கள் புதிய இந்தியாவின் அழைப்பு என்று கூறினார். "இன்று, மீண்டும் ஒருமுறை பொக்ரான் இந்தியாவின் தற்சார்பு இந்தியா, தன்னம்பிக்கை மற்றும் அதன் பெருமையின் திரிவேணியின் சாட்சியாக மாறியுள்ளது" என்று அவர் கூறினார். "இந்தியாவின் அணு ஆயுதச் சோதனையை நேரில் கண்ட அதே பொக்ரான் தான், இன்று உள்நாட்டுமயமாக்கலின் வலிமையை நாம் காண்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

மேம்பட்ட எம்.ஐ.ஆர்.வி தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட நீண்ட தூர அக்னி ஏவுகணையின் சோதனை பற்றி பேசிய பிரதமர், உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இந்த புதிய யுக தொழில்நுட்பம் மற்றும் வலிமையைக் கொண்டுள்ளன என்று உறுதிபடக் கூறினார்.

"தற்சார்பு இந்தியா இல்லாமல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற யோசனையை கற்பனை செய்து பார்க்க முடியாது" என்று கூறிய பிரதமர், மற்றவர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். இன்றைய தருணம் இந்தத் தீர்மானத்தை நோக்கிய ஒரு அடி என்று குறிப்பிட்ட பிரதமர், சமையல் எண்ணெய் முதல் போர் விமானங்கள் வரை தற்சார்பு நிலைக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறினார்.

இந்தியாவின் வலிமையை பிரதிபலிக்கும் டாங்கிகள், பீரங்கிகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் மூலம் தற்காப்பில் தற்சார்பு வெற்றியைக் காணலாம் என்று பிரதமர் கூறினார். "ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள், சைபர் மற்றும் விண்வெளி ஆகியவற்றுடன் மேட் இன் இந்தியா பறப்பதை நாம் அனுபவித்து வருகிறோம். இதுதான் பாரத சக்தி" என்று பிரதமர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானங்கள், மேம்பட்ட இலகுரக போர் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், நாசகாரி கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், மேம்பட்ட அர்ஜுன் டாங்கிகள் மற்றும் பீரங்கிகளையும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவைத் தற்சார்புடையதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட பிரதமர், கொள்கை சீர்திருத்தங்கள், தனியார் துறையில் இணைத்தல், இத்துறையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல் ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழகத்தில் உள்ள பாதுகாப்பு வழித்தடங்கள் குறித்தும், அதில் ரூ .7000 கோடி முதலீடு செய்யப்படுவது குறித்தும் அவர் தெரிவித்தார். மேலும், ஆசியாவின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலை இந்தியாவில் செயல்படத் தொடங்கியுள்ளது. இறக்குமதி செய்யப்படாத பொருட்களின் பட்டியலைத் தயாரித்ததற்காகவும், அந்தப் பொருட்களின் இந்திய சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆதரவளித்ததற்காகவும் முப்படைகளின் தளபதிகளையும் அவர் பாராட்டினார்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நிறுவனங்களிடமிருந்து ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில் நாட்டின் ராணுவ உற்பத்தி இரு மடங்காக ரூ.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 150-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் பாதுகாப்புப் படைகள் அவர்களுக்கு ரூ.1800 கோடி மதிப்புள்ள ஆர்டர்களை வழங்கியுள்ளன.

இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளுக்கு தற்சார்பு என்பது ஆயுதப்படைகளின் தன்னம்பிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறினார். போரின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் போது, ஆயுதப்படைகளின் ஆற்றல் பன்மடங்கு அதிகரிக்கும் என்று அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியா தனது சொந்த போர் விமானம், விமானம் தாங்கி கப்பல்கள், சி 295 போக்குவரத்து விமானம் மற்றும் மேம்பட்ட விமான என்ஜின்களை தயாரித்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை வடிவமைத்து, உருவாக்கி, உற்பத்தி செய்ய மத்திய அமைச்சரவை சமீபத்தில் எடுத்த முடிவைக் குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்புத் துறையின் வளர்ச்சி குறித்தும், எதிர்காலத்தில் எண்ணற்ற வேலைவாய்ப்புகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு இறக்குமதியாளராக இந்தியா இருந்த காலத்தை நினைவு கூர்ந்த பிரதமர், பாதுகாப்பு ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுத்து வருவதை எடுத்துரைத்து, 2014 உடன் ஒப்பிடும்போது நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதியில் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

2014-ம் ஆண்டுக்கு முன்பு பாதுகாப்பு ஊழல்கள், வெடிமருந்து தட்டுப்பாடு, ஆயுதத் தொழிற்சாலைகள் சீர்குலைந்து போயிருந்த சூழலை நினைவுகூர்ந்த பிரதமர், ஆயுதத் தொழிற்சாலைகள் 7 பெரிய நிறுவனங்களாக கார்ப்பரேட் மயமாக்கப்பட்டதை குறிப்பிட்டார். அதேபோல், எச்.ஏ.எல். நிறுவனம் அழிவின் விளிம்பில் இருந்து மீட்கப்பட்டு வரலாறு காணாத லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டது. சி.டி.எஸ் உருவாக்கம், போர் நினைவுச்சின்னம் மற்றும் எல்லை உள்கட்டமைப்பு நிறுவப்பட்டது பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

"ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டதை குறிப்பிட்டு, "ஆயுதப்படையில் உள்ள ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மோடியின் உத்தரவாதத்தின் அர்த்தத்தை அனுபவித்துள்ளனர்" என்று பெருமிதத்துடன் கூறினார். ஓ.ஆர்.ஓ.பி திட்டத்தின் கீழ் ராஜஸ்தானைச் சேர்ந்த 1.75 லட்சம் பாதுகாப்புப் படையினர் ரூ .5,000 கோடி பலனைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார வலிமைக்கு ஏற்ப ஆயுதப்படைகளின் வலிமை அதிகரிக்கிறது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் உருவெடுக்கும்போது, பாதுகாப்பு வலிமையும் புதிய உயரங்களைத் தொடும் என்று அவர் கூறினார். இந்தச் செயல்பாட்டில் ராஜஸ்தானின் பங்கை ஒப்புக் கொண்ட அவர், "வளர்ச்சியடைந்த ராஜஸ்தான் வளர்ச்சியடைந்த சேனைக்குப் பலம் அளிக்கும்" என்றார்.

இந்த நிகழ்ச்சியில்ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் விவேகே ராம் சவுத்ரி, கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாரத் சக்தி

நிலம், வான், கடல், சைபர் மற்றும் விண்வெளி களங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்திய ஆயுதப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன்களை வெளிப்படுத்தும் யதார்த்தமான, ஒருங்கிணைந்த மற்றும் பல கள நடவடிக்கைகளை பாரத் சக்தி உருவகப்படுத்தும்.

டி-90 (ஐஎம்) டாங்கிகள், தனுஷ் மற்றும் சாரங் கன் சிஸ்டம்ஸ், ஆகாஷ் ஆயுத அமைப்பு, லாஜிஸ்டிக்ஸ் ட்ரோன்கள், ரோபோடிக் மியூல்ஸ், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ஏ.எல்.எச்) மற்றும் இந்திய ராணுவத்தின் ஆளில்லா வான்வழி வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய உபகரணங்கள் மற்றும் ஆயுத அமைப்புகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றன.

கடற்படை கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், தானியங்கி சரக்குகளை சுமந்து செல்லும் வான்வழி வாகனங்கள் மற்றும் செலவழிக்கக்கூடிய வான்வழி இலக்குகள் ஆகியவற்றை இந்திய கடற்படை காட்சிப்படுத்தியது, இது கடல்சார் வலிமை மற்றும் தொழில்நுட்ப நுட்பங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்திய விமானப்படை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் மேம்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர்களை நிலைநிறுத்தி, வான் செயல்பாடுகளில் வான் மேன்மையையும் பன்முகத்தன்மையையும் நிரூபித்தது.

உள்நாட்டு தீர்வுகளுடன் சமகால மற்றும் எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் சமாளிக்கவும் இந்தியாவின் தயார்நிலையை தெளிவாகக் குறிக்கும் வகையில், பாரத் சக்தி உலக அரங்கில் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களின் பின்னடைவு, புதுமை மற்றும் வலிமையை எடுத்துக்காட்டுகிறது. இந்திய ஆயுதப் படைகளின் வலிமை மற்றும் செயல்பாட்டு வலிமை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் புத்திக் கூர்மை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் மூலம், பாதுகாப்பில் தற்சார்பை நோக்கி நாட்டின் வலுவான முன்னேற்றத்திற்கு இந்தத் திட்டம் எடுத்துக்காட்டாகும்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!