ராமா் கோயில் விழா: கடுமையான விரதத்தில் மோடி

ராமா் கோயில் விழா: கடுமையான விரதத்தில் மோடி
அயோத்தி ராமா் கோயில் மூலவா் பிராணப் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமா் நரேந்திர மோடி 11 நாள்கள் கடுமையான விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க அயோத்தியில், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிரம்மாண்ட ராமா் கோயில் கட்டப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இக்கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா வரும் 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறவிருக்கிறது. பிரதமா் மோடி முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளா்கள் பங்கேற்கவுள்ளனா்.

கோயில் கருவறையிலுள்ள சிலைக்குள் தெய்வத்தை அழைக்கும் நிகழ்வான பிராணப் பிரதிஷ்டையில் பங்கேற்பதை முன்னிட்டு, பிரதமா் மோடி 11 நாள்கள் விரதம் மற்றும் சிறப்பு சடங்குகளை கடந்த 12-ஆம் தேதி தொடங்கினார். இதையொட்டி, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள புண்ணிய தலமான ராமகுண்ட் மற்றும் ஸ்ரீ காலாராம் கோயிலில் அவா் வழிபட்டார்.

விரத காலத்தில் பிரதமா் இளநீா் மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும், தரையில் போர்வையை விரித்து படுத்து உறங்குவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘தீவிர ராம பக்தரான பிரதமா் மோடி, கோபூஜையை மேற்கொள்வதோடு, அன்னதானம், வஸ்திர தானம் என பல்வேறு தான தா்மங்களிலும் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் ராம பிரான் தொடா்புடைய பிரசித்திப் பெற்ற தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார். பல்வேறு மொழிகளில் ராமாயணம் மற்றும் பஜனைப் பாடல்களை கேட்கிறார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாசிக் ராமகுண்ட், ஸ்ரீகாலாராம் கோயில்களைத் தொடா்ந்து, ஆந்திர மாநிலம், லேபக்ஷியில் உள்ள வீரபத்ரா் கோயிலில் பிரதமா் வழிபட்டார். பின்னா், கேரள மாநிலம் குருவாயூா் ஸ்ரீகுருவாயூரப்பன் மற்றும் திருப்பிரயார் ஸ்ரீராம சுவாமி கோயில்களிலும் வழிபாடு நடத்தினார்.

முன்னதாக, ராமா் கோயில் பிரதிஷ்டை விழாவையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் ஆன்மீகத் தலங்களில் தூய்மைப் பணியை மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

ஸ்ரீகாலாராம் கோயிலில் பிரதமா் மோடி தூய்மைப் பணியிலும் ஈடுபட்டார். அவரது அழைப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது; சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை தன்னார்வத்துடன் கோயில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தார்.

Tags

Next Story