சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு! பிரதமர் மோடி அறிவிப்பு
பைல் படம்.
மகளிர் தினத்தையொட்டி நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை(மார்ச்.8) பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
இன்று, மகளிர் நாளை கொண்டாடும் விதமாக நாட்டுப் பெண்களுக்கு அளிக்கும் பரிசாக பிரதமர் மோடி, வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலையை ரூ.100 குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களின் நிதிச் சுமையை கணிசமாகக் குறைக்கும், குறிப்பாக நமது பெண் சக்திக்கு பயனளிக்கும்.
சமையல் எரிவாயுவை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம், குடும்பங்களின் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
மேலும், மத்திய அரசின் முடிவு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் அவர்களுக்கு ‘வாழ்க்கையை எளிதாக்குவதை’ உறுதிசெய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப உள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை சரிவை சந்தித்தபோதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்தபோது ரூ.417-ஆக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ரூ.1118 ஆக உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், மக்களவைத் தேர்தல் நெருங்கும் தருவாயில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைப்பதாக மோடி அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கிடையில், இது தொடர்பான முடிவில், உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஏழை பெண்களுக்கு எல்பிஜி சிலிண்டர் மானியம் ரூ. 300 ஏப்ரல் 1 முதல் அடுத்த நிதியாண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu