இமாசலப்பிரதேசத்தில் ரூ.11, 000 கோடி மதிப்பில் நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில், ரூ.11,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நீர்மின் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ரேணுகாஜி அணைக்கட்டுத் திட்டம், லூரி நீர் மின் திட்டம் நிலை-1, மற்றும் தௌலசித் நீர் மின் திட்டம் போன்றவை இந்த நீர் மின்திட்டங்களில் அடங்கும். அத்துடன் சவ்ரா – குட்டூ நீர் மின் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இமாச்சலப்பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இமாச்சலப்பிரதேச முதலமைச்சர் திரு ஜெய் ராம் தாக்கூர், மத்திய அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டு மக்களின் 'வாழ்க்கையை எளிதாக்குவது' தலையாய முன்னுரிமையாக இருப்பதோடு, மின்சாரம் இதில் பெரும் பங்கு வகிப்பதாகவும் பிரதமர் கூறினார். இன்று தொடங்கி வைக்கப்பட்ட நீர் மின் திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. "கிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் ஸ்ரீ ரேணுகாஜி அணைக்கட்டுத்திட்டம் முடிவடையும் போது, அதன் மூலம் பெரும் பகுதி நேரடியாக பலனடையும். இந்தத் திட்டத்தின் மூலம் எவ்வளவு வருவாய் கிடைத்தாலும், அதில் பெரும் பகுதி இப்பகுதியின் வளர்ச்சிக்காக செலவிடப்படும்" என்று பிரதமர் குறிப்பிட்டார்.
புதிய இந்தியா பணியாற்றும் விதத்தை மாற்ற வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் தொடர்பான இலக்குகளை இந்தியா எட்டிய வேகத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார்.
"2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் 40 சதவீதத்தை புதைப் படிமம் அல்லாத வளங்கள் மூலம் மேற்கொள்வதென 2016-ல் இந்தியா இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை இந்தியா இந்த ஆண்டு நவம்பரிலேயே எட்டியிருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதத்தை அளிக்கிறது" என்று பிரதமர் தெரிவித்தார். "சுற்றுச்சூழலையும் பாதுகாத்துக் கொண்டே இந்தியா எவ்வாறு வளர்ச்சியையும் விரைவுப்படுத்துகிறது என்று ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுகிறது. சூரியசக்தி மின்சாரம் முதல் நீர் மின்சாரம் வரையிலும் காற்றாலை மின்சாரத்திலிருந்து பசுமை ஹைட்ரஜன் வரையிலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அனைத்து வளங்களையும் முழுமையாக பயன்படுத்த நாடு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது" என்று பிரதமர் தெரிவித்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu