கேதார்நாத்தில் ரூ.180 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

கேதார்நாத்தில் ரூ.180 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
X
பிரதமர் நரேந்திரமோடி 
ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யா நினைவிடத்தையும், அவரது திருஉருவச்சிலையையும் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

கேதார்நாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஸ்ரீ ஆதிசங்கராச்சார்யா நினைவிடத்தையும், அவரது திருஉருவச்சிலையையும் திறந்து வைத்தார். அத்துடன் நடைபெற்று வரும் அடிப்படை கட்டமைப்புப் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேதார்நாத் கோவில் நிகழ்வோடு நாடு முழுவதும் உள்ள பல இடங்களிலிருந்தும், நான்கு கோவில்களிலிருந்தும், 12 ஜோதிர்லிங்கங்களுக்குப் பூஜைகள் நடத்தப்பட்டன. அனைத்து நிகழ்வுகளும் கேதார்நாத் கோவிலின் பிரதான நிகழ்வோடு இணைக்கப்பட்டன.


இந்த நிகழ்வில் கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர் இந்தியாவின் மகத்தான ஆன்மீக ரிஷிகள் பாரம்பரியத்தை எடுத்துரைத்ததோடு கேதார்நாத் ஆலயத்திற்குத் தமது வருகையின் விவரிக்கமுடியாத மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நேற்று நவ்ஷேராவில் ராணுவ வீரர்களுடன் தமது கலந்துரையாடலை நினைவுகூர்ந்த அவர், 130 கோடி இந்தியர்களின் உணர்வுகளை ராணுவ வீரர்களிடம் தாம் எடுத்துச்சென்றதாகக் கூறினார். கோவர்தன பூஜை தினமான இன்று ராணுவ வீரர்களின் பூமியில் தாம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், பாபா கேதாரின் தெய்வீகப் பார்வையிலும் இருப்பதாகக் கூறினார். 'சில அனுபவங்கள் மிகவும் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அளவிடமுடியாத அதுபற்றி வார்த்தைகளில் விவரிக்க இயலாது' என்று என்ற ராம் சரித மானஸ் ஸ்லோகத்தைப் பிரதமர் மேற்கோள் காட்டினார். இவ்வாறுதான் பாபா கேதார்நாத் ஆலயத்தில் தாம் உணர்ந்ததாக அவர் கூறினார்.


கூடாரங்கள், வரவேற்பு மையங்கள் போன்ற புதிய வசதிகள் பூசாரிகள் மற்றும் பக்தர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று குறிப்பிட்ட பிரதமர் புனித யாத்திரையின் தெய்வீக அனுபவத்தில் முழுமையாக ஈடுபட அவர்களை அனுமதிக்கும் என்றார். 2013ல் கேதார்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை நினைவுகூர்ந்த பிரதமர், பல ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் கற்பனை செய்ய முடியாதவை என்று குறிப்பிட்டார். "இங்கே வந்த மக்கள் நமது கேதார் ஆலயம் மீண்டும் எழுந்து நிற்குமா என்று நினைத்தார்கள், ஆனால் இது முன் எப்போதையும் விட கூடுதல் பெருமிதத்தோடு நிற்கும் என்று எனது உள்மனம் கூறியது" என அவர் தெரிவித்தார். பகவான் கேதாரின் கருணையாலும் ஆதிசங்கராச்சாரியாவின் ஆசியாலும், புஜ் நிலநடுக்கத்திற்குப்பின் தம்மால் நிர்வகிக்கப்பட்ட அனுபவத்தாலும் இக்கட்டான அந்தத் தருனத்தில் தம்மால் உதவி செய்ய முடிந்தது என்று பிரதமர் கூறினார். தமது தனிப்பட்ட அனுபவத்தை வெளிப்படுத்திய அவர், தமது வாழ்க்கையின் முற்பகுதியில் தம்மை வளர்த்தெடுத்த இந்த இடத்திற்கு சேவை செய்ய முடிந்தது, ஓரு நல்வாய்ப்பாகும் என்றார். இந்தக் கோவிலின் மேம்பாட்டு பணிகளை அயராது தொடர்ந்த தொழிலாளர்கள், பூசாரிகள், பூசாரிகளின் ராவல் குடும்பங்கள், அதிகாரிகள் மற்றும் முதலமைச்சருக்கு அவர் நன்றி கூறினார். இந்தப் பணிகளை முதலமைச்சர் ட்ரோன்கள் மற்றும் இதர தொழில்நுட்பங்கள் மூலம் தொடர்ந்து கண்கானித்து வந்ததாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. "இந்தப் பழமைவாய்ந்த பூமியில், நவீனத்துடன் தெய்வீகம் இணைக்கப்பட்டு, இந்த மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றிருப்பது பகவான் ஷங்கரின் இயற்கையான அருளாசியின் விளைவாகும்" என்று அவர் கூறினார்.

ஆதி சங்கராச்சாரியா பற்றி பேசிய மோடி, ஷங்கர் என்பதற்கு நன்மை செய்யும் ஒருவர்தான் ஷங்கர். இந்த இலக்கணம் ஆச்சார்ய ஷங்கரால் நேரடியாக நீரூபிக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை மிகவும் சிறப்புடையது, சாமானிய மக்களின் நலனுக்கு வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டிருந்தார் என்று பிரதமர் கூறினார். ஆன்மீகமும், சமயமும் ஒரே மாதிரியான, காலத்திற்கு ஒவ்வாத நடைமுறைகளுடன் இணைக்கப்பட்டிருந்த காலத்தைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். இந்தத் தருணத்தில், இந்தியத் தத்துவம் மனிதகுல நலன் பற்றி பேசுகிறது. வாழ்க்கையை ஒட்டுமொத்த கண்ணோட்டத்தில் பார்க்கிறது. இந்த உண்மையின் மீது சமூகம் விழிப்புணர்வு பெற ஆதிசங்கராச்சாரியா பணி செய்தார் என்று அவர் குறிப்பிட்டார்.

நமது கலாச்சார பாரம்பரிய நம்பிக்கையின் மையங்கள் அனைவருக்கும் உகந்ததாகவும் மதிப்புமிகு பெருமிதம் கொள்வதாகவும் இன்று இருக்கின்றன என்பதை பிரதமர் வற்புறுத்திக் கூறினார். "அயோத்தியில் பகவான் ஸ்ரீ ராமரின் மாபெரும் ஆலயம் உருவாகிவருகிறது, அயோத்யா தனது புகழை மீண்டும் பெறுகிறது. இரண்டு நாட்களுக்கு முன் அயோத்யாவில் தீபோத்சவம் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. இதிலிருந்து தொன்மையான இந்தியக் கலாச்சாரம் எவ்வாறு இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் கற்பனை செய்துகொள்ளலாம்" என்று மோடி கூறினார்.

இன்றைய இந்தியா அதன் பாரம்பரியத்தில் நம்பிக்கையோடு இருக்கிறது என்று பிரதமர் கூறினார். "இந்தியா இன்று கடினமான இலக்குகளையும் கால வரம்பையும் தனக்குத்தானே நிர்ணயித்துக்கொண்டுள்ளது. கால வரம்புகள், இலக்குகள் குறித்து அதைரியம் கொள்வது இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல" என்று பிரதமர் கூறினார். விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு பற்றி பேசிய பிரதமர் இந்தியாவின் புகழ்மிக்க விடுதலைப்போராட்டம் தொடர்பான இடங்களுக்கும், புனித யாத்திரைக்கான பக்திசார்ந்த இடங்களுக்கும் பயணம் செய்யவேண்டும் என்றும் இதன் மூலம் இந்தியாவின் உணர்வை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

21ம் நூற்றாண்டின் மூன்றாவது பத்தாண்டு உத்தராகண்டுக்கு உரியது என்று பிரதமர் கூறினார். சார்தாம் நெடுஞ்சாலைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் சார்தாம் சாலைத் திட்டப்பணிகள் அதிவேகமாக நடைபெற்றுவருகின்றன என்று அவர் தெரிவித்தார். இந்தப் பணி தொடங்கப்பட்டுவிட்டதால் எதிர்காலத்தில் பக்தர்கள் கேதார்நாத் ஆலயத்திற்குக் கம்பிவட வாகனம் மூலம் வரமுடியும். இதன் அருகே புனிதமான ஹேம்குந் சாஹிபும் உள்ளது. ஹேம்குந் சாஹிபை எளிதாக தரிசனம் செய்வதற்குக் கம்பிவடப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

"உத்தராகண்டின் ஏராளமான வளங்கள் மற்றும் மக்களின் திறன் மீது முழுமையான நம்பிக்கை வைத்து உத்தராகண்டின் வளர்ச்சிக்கான 'மகா யாகத்தில்' மாநில அரசு ஈடுபட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உத்தராகண்ட் காட்டிய கட்டுப்பாட்டினைப் பிரதமர் பாராட்டினார். புவியியல் ரீதியான சிரமங்களை விஞ்சி, உத்தராகண்டும் அதன் மக்களும் 100 சதவீத முதல் தவனை தடுப்பூசி இலக்கை இன்று சாதித்துள்ளனர். இதுதான் உத்தராகண்டின் பலமும் சக்தியும் ஆகும் என்று அவர் கூறினார். "உத்தராகண்ட் மிக உயரமான பகுதியில் அமைந்துள்ளது. தமது சொந்த உயரத்தைவிடவும் கூடுதலான உயரத்திற்கு எனது உத்தராகண்ட் முன்னேறும்" என்பதுடன் பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

2013 வெள்ளத்தில் அழிந்ததால் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியா சமாதி மறுகட்டுமானம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த கட்டுமானப்பணியும் பிரதமரின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்துவந்தார். இன்றும்கூட சரஸ்வதி நதியின் நம்பிக்கைப் பாதையின் இரு மருங்கிலும் செய்துமுடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்றுவரும் பணிகளைப் பிரதமர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். சரஸ்வதி நதியின் நம்பிக்கைப் பாதையில் தற்காப்புச்சுவர் மற்றும் சதுக்கங்கள், மந்தாகினி நதியின் நம்பிக்கைப் பாதையில் தற்காப்புச்சுவர், தீர்த்த ப்ரோஹித இல்லங்கள், மந்தாகினி நதியின் குறுக்கே உள்ள கருட் சட்டி பாலம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை கட்டமைப்புத் திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இந்தத் திட்டங்கள் 130 கோடிக்கும் கூடுதலான செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சங்கம் சதுக்க மறு சீரமைப்பு, முதலுதவி மற்றும் சுற்றுலா வரவேற்பு மையம், நிர்வாக அலுவலகம் மற்றும் மருத்துவமனை, இரண்டு விருந்தினர் விடுதிகள், காவல் நிலையம், கட்டுப்பாட்டு மையம், மந்தாகினி நதியின் நம்பிக்கைப் பாதையில் வரிசை நிர்வாகம், மழை பாதுகாப்பு முகாம் மற்றும் சரஸ்வதி நதிக்கரையில் மக்கள் சேவைக்கான கட்டிடம் உள்ளிட்ட ரூ.180 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள பல்வகை திட்டங்களுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்