7 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்

7 புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்
X
“தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசும், அசாம் அரசும் அக்கறையுடன் பாடுபட்டு வருகின்றன’ -பிரதமர் மோடி

திப்ருகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அசாமில் அமைக்கப்பட்டுள்ள ஏழு புற்றுநோய் மருத்துவமனைகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த புற்றுநோய் மருத்துவமனைகள் திப்ருகர், கோக்ரஜார், பார்பேடா, தரங், தேஜ்பூர், லக்கிம்பூர், ஜோர்ஹாட் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

திப்ருகரில் புதிய மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்ட பிரதமர், இந்த மருத்துவமனையை நாட்டிற்கு அர்ப்பணித்தார். இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக துப்ரி, நல்பாரி, கோல்பாரா, நகோன், சிவசாகர், தீன்சுக்யா, கோலாகாட் ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள ஏழு புதிய புற்றுநோய் மருத்துவமனைகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அசாம் ஆளுநர் ஜகதீஷ் முகி, அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனாவால், ராமேஷ்வர் தெலி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மாநிலங்களவை உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பண்டிகைகால உணர்வுகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தலைச்சிறந்த புதல்வர்கள் மற்றும் புதல்விகளுக்கு அஞ்சலி செலுத்தி தமது உரையை தொடங்கினார். அசாமில் கட்டப்பட்டு இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனைகளும், புதிதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவமனைகளும், வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமின்றி தெற்காசியா முழுவதும் சுகாதார சேவை திறன்களை அதிகரிக்கும் என்றார். புற்றுநோய், அசாமில் மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், "நமது பரமஏழைகள், நடுத்தர குடும்பங்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை புற்றுநோய்க்கு சிகிச்சை பெற நோயாளிகள் பெரிய நகரங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தியது. அசாமில் நீண்டகாலமாக நிலவிவந்த இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அசாம் முதலமைச்சர் திரு சர்மா, மத்திய அமைச்சர் திரு சோனாவால் ஆகியோரையும் டாடா அறக்கட்டளையையும் பிரதமர் பாராட்டினார். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கான பிரதமரின் முன் முயற்சி திட்டத்திற்கு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்திலும் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன் குவஹாத்தியிலும் இந்த வசதியை ஏற்படுத்த வகை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

சுகாதார கவனிப்புத் துறைக்கான அரசின் தொலைநோக்கு திட்டம் குறித்து விவரித்த பிரதமர், நோய் என்பது தாமாக உருவாவதில்லை. எனவே, நமது அரசு நோய் தடுப்பு சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக யோகா, உடல் தகுதி தொடர்பான திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஒருவேளை நோய் ஏற்பட்டால் அதனை தொடக்கத்திலேயே கண்டறிய வேண்டும். இதற்காக நாடுமுழுவதும் லட்சக்கணக்கான பரிசோதனை மையங்கள் கட்டப்பட்டுள்ளன. அடுத்ததாக, மக்கள் முதலுதவி வசதி பெற அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நான்காவது முயற்சியாக சிறந்த மருத்துவமனையில் கட்டணமின்றி சிகிச்சை பெற ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் ரூ.5 லட்சம் வரை சிகிச்சைக்காக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. என்று பிரதமர் கூறினார்.

புற்றுநோய் சிகிச்சைக்கு அதிக செலவு என்பது மக்கள் மனங்களில் பெரிய தடையாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். குடும்பத்தை கடனிலும், சிரமத்திலும் தள்ளிவிடக்கூடாது என்பதற்காக குறிப்பாக பெண்கள் சிகிச்சையை தவிர்க்கிறார்கள். எனவே, புற்றுநோய்க்கான பல மருந்துகளின் விலையை ஏறத்தாழ பாதி அளவுக்கு அரசு குறைத்துள்ளது. இதனால், நோயாளிகளின் ரூ.1,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. மக்கள் மருந்தக மையங்களில் 900-க்கும் அதிகமான மருந்துகள் குறைந்த விலையில் தற்போது கிடைக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

ஆயுஷ்மான் பாரத் மற்றும் நல்வாழ்வு மையங்கள் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதை உறுதி செய்கின்றன. நாடுமுழுவதும் 15 கோடிக்கும் அதிகமானோர் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று பிரதமர் தெரிவித்தார். அசாம் மாநிலத்தில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அரசை பாராட்டிய பிரதமர், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரி அமைப்பது என்ற மத்திய அரசின் உறுதிமொழியை செயல்படுத்துவதில் முதலமைச்சரும், அவரது அணியினரும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கை சிறக்க மத்திய அரசும், அசாம் மாநில அரசும் நன்கு பணியாற்றி வருகின்றன. தற்போது பொதுமக்களின் நல்வாழ்வு நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கடந்த நூற்றாண்டின் கருத்துக்கள் கைவிடப்பட்டு புதிய போக்குவரத்து தொடர்புகள் உருவாக்கப்படுகின்றன. அசாமில் சாலை, ரயில், விமான போக்குவரத்து விரிவாக்கம் கண்கூடாக தெரிகிறது. இது ஏழைகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் கைவிடப்பட்டோர் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அசாம் அரசின் அசாம் புற்றுநோய் சிகிச்சை அறக்கட்டளையும், டாடா அறக்கட்டளையும் இணைந்த கூட்டு முயற்சியின் மூலம் தெற்காசியாவின் மிகப்பெரிய குறைந்த செலவிலான புற்றுநோய் சிகிச்சை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக இந்த மாநிலத்தில் பரவலாக 17 புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் முதலாவது கட்டத்தின் 10 மருத்துவமனைகளில் 7 மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. எஞ்சிய 3 மருத்துவமனைகளின் கட்டுமானம் பல்வேறு நிலைகளில் உள்ளது. 2 –ஆவது கட்டத்தில் 7 புதிய மருத்துவமனைகள் கட்டப்படும்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்