டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து: மத்திய அரசு

பைல் படம்.
கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்திற்கு சொந்தமாக 3 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. என்.எல்.சி மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தின் பெரும்பகுதி காவிரிப் படுகையை ஒட்டியே அமைந்துள்ள நிலையில், மீதமுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களிலும், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்திலும் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகாலாத் ஜோஷியை சந்தித்து மனு அளித்தார். இதனை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக சார்பில் அண்ணாமலை வைத்த கோரிக்கையை ஏற்று 3 பகுதிகளில் நிலக்கரி எடுக்கப்படாது என மத்திய அமைசசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu