தேசிய சட்ட தீர்ப்பாயங்களில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு

தேசிய சட்ட தீர்ப்பாயங்களில் வேலை வாய்ப்பு: விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு
X
மத்திய அரசு
தேசிய சட்ட தீர்ப்பாயங்கள் மற்றும் மேல் முறையீடு தீர்ப்பாயங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய சட்ட தீா்ப்பாயம் மற்றும் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களில் காலியாக உள்ள 20 நீதித் துறை மற்றும் தொழில்நுட்ப உறுப்பினா் பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது. நவம்பர் 12ம தேிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேசிய பசுமைத் தீா்ப்பாயம், தேசிய சட்ட தீப்பாயம் உள்ளிட்ட பல்வேறு தீா்ப்பாயங்கள் மற்றும் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களில் ஏராளமான நீதித் துறை சாா்ந்த மற்றும் தொழில்நுட்ப உறுப்பினா் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பிறகும் இந்த காலிப் பணியிடங்களை மத்திய அரசு நிரப்பாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பா் 6-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், 'உறுப்பினா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பாமல் தீா்ப்பாயங்களை பெரும் சிக்கலுக்கு மத்திய அரசு ஆளாக்கி வருவது, உச்சநீதிமன்றத்தின் பொறுமையை சோதிப்பதாக அமைந்துள்ளது. மத்திய அரசுடன் மோதல்போக்கை கடைப்பிடிக்க உச்சநீதிமன்றம் விரும்பவில்லை. எனவே, காலிப் பணியடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று காட்டமாக தெரிவித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலைத் தொடா்ந்து பல்வேறு தீா்ப்பாயங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை மத்திய அரசு கடந்த சில நாள்களாக மேற்கொண்டு வருகிறது. அதன் மூலம் தேசிய நிறுவனச் சட்ட தீா்ப்பாயத்தில் காலியாக இருந்த 31 நீதி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினா் பணியிடங்கள் கடந்த மாதம் நிரப்பப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, தேசிய சட்ட தீா்ப்பாயம் மற்றும் தேசிய சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களில் காலியாக உள்ள 20 நீதி மற்றும் தொழில்நுட்ப உறுப்பினா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் தேசிய நிறுவனச் சட்ட தீா்ப்பாயத்தில் 9 நீதித் துறை மற்றும் 6 தொழில்நுட்ப உறுப்பினா் பணியிடங்கள் என மொத்தம் 15 காலிப் பணியிடங்களும், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் 3 நீதித் துறை உறுப்பினா்கள் மற்றும் 2 தொழில்நுட்ப உறுப்பினா் பணியிடங்கள் என மொத்தம் 5 காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தீா்ப்பாய நீதித் துறை உறுப்பினா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் உயா்நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றியிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப உறுப்பினா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் கணக்குத் தணிக்கையாளராக, செலவு கணக்காளா் அல்லது ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய நிறுவன சட்ட சேவை அல்லது இந்திய சட்ட சேவைத் துறைகளில் மத்தியஅரசின் செயலா் அல்லது கூடுதல் செயலா் அந்தஸ்திலான பணியில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவா்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

அது தவிர, தொழிலாளா் நல நீதிமன்றம் அல்லது தீா்ப்பாயங்களில் தலைமை அதிகாரியாக 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவா்களும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் இவ்வாறு மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!