பெட்ரோல் ரூ.5 டீசல் ரூ.10 விலை குறைப்பு
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஒரு மாதமாக, பெட்ரோல், டீசல் விலை தினமும் சராசரியாக, 30 காசுகள் வரை விலை உயர்த்தப்பட்டு வந்தது.
குறிப்பாக, டீசல் விலை உயர்வால், சரக்கு வாகனங்களின் போக்குவரத்து செலவு அதிகரித்தது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையிலும், தீபாவளி பரிசாகவும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று இரவு அதிரடியாக குறைத்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. மேலும் பெட்ரோல், டீசல் மதிப்பு கூட்டு வரியை (வாட்) குறைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் வாகன உரிமையாளர்களும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu