நாடாளுமன்ற தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடிதம்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள 17 வது நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 18 வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது தொகுதி பங்கீடு உள்ளிட்ட வேலைகளை கிட்டத்தட்ட 90 சதவீதம் முடித்து விட்டன. பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களையும் தொடங்கி விட்டனர். இதே போல மாநில கட்சிகளும் அந்தந்த மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் அது இரண்டாவது வாரமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நாளை மாலை 3 மணிக்கு டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக இருந்தது. ஒருவர் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெற்றிருந்தார். இன்னொரு தேர்தல் ஆணையர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர் நேற்றுதான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பதற்கான முடிவை எடுத்துள்ளது.

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து உள்ளார். அவர் இன்று இரவே டெல்லி திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் நாளை தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து அரசியல் கட்சிகள் மேலும் சுறுசுறுப்படைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story