தொடங்கியது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்
Parliament begins today- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. (கோப்பு படம்)
நாடாளுமன்றம் வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுக்கு 3 முறை கூடும். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாத இறுதியில் தொடங்கி, மார்ச் மாதம் வரை நடைபெறும். மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் நடைபெறும்.
இதனிடையே, செப்டம்பர் 18ம தேதி (இன்று) முதல் 22ம தேதி வரை 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான 18ம தேதி (இன்று) மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும். 19ம தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்புக்கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்புக்கூட்டத்தொடரில் பிரதமர் மோடி துவக்க உரையாற்ற உள்ளார். இந்த சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, அரசியல் நிர்ணய சபையாக இருந்ததில் இருந்து கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம், அதன் சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள், படிப்பினைகள் ஆகியவை குறித்து இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது.
வக்கீல்கள் திருத்த மசோதா, பத்திரிக்கை மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா ஆகிய மசோதாக்களும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகின்றன. இவை ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டன. அஞ்சல் அலுவலக மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இது, ஏற்கனவே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாக்கள் மட்டுமே நிகழ்ச்சி நிரல் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும், இவை தவிர வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு தனி உரிமை உள்ளது. இந்த தனி உரிமை மூலம் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மத்திய அரசு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு வெற்றிகமாக நடத்தப்பட்டதற்கு மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை சபாநாயகர் ஜக்தீப் தங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu