ஆஹா...ரூ.1,250 கோடியில் கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடம் இவ்வளவு பிரம்மாண்டமா?
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உள் புற தோற்றம்.
டெல்லியில் நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி புதிய நாடாளுமன்றம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடி என முதலில் திட்டமிடப்பட்டு இருந்தது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்பட்டது.
ஆனால் ஆரம்ப காலத்தில் திட்டமிட்டதை விட கட்டுமான செலவு எகிறியது. ரூ.1250கோடியாக உயர்ந்தது. கட்டுமான பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
கிட்டத்தட்ட அதன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அந்த கட்டிடம் தொடர்பான புகைப்படங்களை புதிய பாராளுமன்றம் மற்றும் சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புக்கு பொறுப்பான மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA), முக்கோண வடிவ கட்டமைப்பின் உட்புற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
அமைச்சகத்தின் பிரத்யேக இணையதளத்தில் (centralvista.gov.in) இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதற்கட்டமாக மக்களவை அரங்கு கிட்டத்தட்ட தயராகி விட்டது. கட்டிடக் கலைஞர் பிமல் படேல் தலைமையிலான அகமதாபாத்தைச் சேர்ந்த HCP டிசைன்ஸ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த கட்டிடம், தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.
மாநிலங்களவை அரங்கில் 384 இருக்கைகள் உள்ளன. மேலவையின் உட்புறம் தாமரை கருப்பொருளாகவும், மக்களவையில் மயில் கருப்பொருளாகவும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புதிய கட்டிடத்தில் தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் உள்ளது போன்று மத்திய மண்டபம் இல்லை. அதற்கு பதிலாக மக்களவை அரங்கு இரு அவைகளின் கூட்டு அமர்வுகளுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின், சென்ட்ரல் விஸ்டா இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய பாராளுமன்றம் மரத்தாலான கட்டமைப்பின் விரிவான பயன்பாட்டைக் கொண்டிருக்கும் எனத் தெரிகிறது. புதிய கட்டிடத்தின் தளங்களின் தரைகள், உத்தரபிரதேசத்தில் உள்ள பதோஹியில் இருந்து கையால் நெய்யப்பட்ட கம்பளங்கள் விரிக்கப்பட்டுள்ளன.
முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நவீன ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதோடு உறுப்பினர்களின் முக அடையாத்தைக் கொண்டு உள்ளே அனுமதிக்கும் தொழில் நுட்பம், அவிநவீன கண்காணிப்பு கேமரா என உயர் தர பாதுகாப்பு அம்சங்கள் புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. புதிய நாடாளுன்றக் கட்டிடத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஆஹா என வியக்கும் வகையில் இந்த புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதியை புதிய நடாளுமன்றக் கட்டிடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu