விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
![விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல் விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்](https://www.nativenews.in/h-upload/2024/04/28/1896648-cap.webp)
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் விழாவில் அவர் பெயர் இடம் பெறாதது சர்ச்சையானது. இந்நிலையில் அவருக்கு எப்போது பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்பட்ட நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை குறைபாட்டால் காலமானார்.
இதையடுத்து லட்சக்கணக்கான ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின், நடிகர் விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற விழாவில் விஜயகாந்த் பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் அவர் பெயர் இல்லை. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி அன்று நடைபெற்ற விழாவில் ஐந்து பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விருது பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இது பலரிடையே கடும் கண்டனங்களை பெற்றது மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்காததால் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படவில்லையா என பலரும் கேள்வி எழுப்பினர். சமுக வலைதளங்களிலும் மத்திய அரசு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்த் க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவது குறித்த தகவலை தெரிவித்து இருக்கிறார் தேமுதிக பொது செயலாளரும், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து மே ஒன்பதாம் தேதி நடைபெறும் விருது விழாவில் விஜயகாந்த் பத்மபூஷன் விருது வழங்கப்பட இருப்பதாகவும் அதற்கான அழைப்பு தங்களுக்கு வந்துள்ளதாகவும் கூறினார். மேலும் இருவர் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பதால் தானும் எனது மகன் விஜயபிரபாகரனும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விஜயகாந்த்துக்கான பத்மபூஷன் விருதை பெற்றுக் கொள்வோம்” என கூறியிருக்கிறார். இந்த செய்தி விஜயகாந்த் ஆதரவாளர்களை மகிழ்ச்சியில் வாழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu