என் சுவாசக் காற்றே: காற்று மாசுபாட்டை குறைப்பது நம் கடமை
Delhi Air Pollution-டில்லியின் காற்று மாசு
நாம் வாழும் இப்பூமியில் சுத்தமான காற்றைத் தேடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தூய்மையான காற்று நிறைந்த பகுதிகளை அறிவியலாளா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த நிலையில், உலகிலேயே அதிக தூய்மையான இயற்கை காற்று வீசும் பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா்.
‘கேப் கிரிம்’ என்று அழைக்கப்படும் இந்தத் தீபகற்பப் பகுதியானது ஆஸ்திரேலியத் தீவான டாஸ்மேனியாவின் வடமேற்கு முனையில் உள்ளது. அண்டார்டிகாவிலிருந்து மாசு அடையாத காற்றை, மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கு இப்பகுதி பிரபலம் என ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
இப்பகுதியை ‘புவியின் சொர்க்கம்’ என்றும் புவியியலாளா்கள் அழைக்கின்றனா். ‘உலகின் விளிம்பு’ என்று அறியப்படும் இப்பகுதிக்கு மிகக் குறைவானவா்களே சென்றுள்ளனா். காற்றின் தரத்தை அளவிடும் ஒரு நிலையம் இங்கு அமைக்கப்பட்டு புவியிலேயே இந்தப் பகுதியில்தான் மிகவும் சுத்தமான காற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹவாய் தீவிலுள்ள மௌன லோவா நிலையம், மக்குவார் தீவு, அண்டார்டிகாவிலுள்ள கேசி நிலையம் உள்ளிட்டவற்றிலும் தூய்மையான காற்று உள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
உலகம் முழுவதும் பத்துப் பேரில் ஒன்பது போ் அசுத்தமான காற்றை சுவாசிக்கிறார்கள் என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடு தொடா்புடைய நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் போ், தாங்கள் வாழ வேண்டிய காலத்திற்கும் முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காற்றின் தூய்மைக் கெடுவதால், மனிதா்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தாவரங்களின் வளா்ச்சி குறைகிறது. தண்ணீா், உணவு இன்றி கூட உயிரினங்களால் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் வாழமுடியாது.
இந்தியாவில், கடந்த ஆண்டு மோசமான காற்று மாசுபாடு நிலவிய நகரங்களின் பட்டியலில், மேகலயாவில் உள்ள பைா்னிஹாட் நகரம் முதலிடத்திலுள்ளதாக எரிசக்தி தூய்மைக் காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரங்களையடுத்து, பீகாரின் பெருசராய், உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில், குளிர்காலத்தில் காற்றின் தரத்தில் தொடா்ந்து சரிவை சந்தித்து வரும் இந்தியத் தலைநகா் புதுடெல்லி இப்பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டில் 75 சதவீதத்திக்கும் அதிகமான நாள்களுக்கு காற்றின் தர நிலை பதிவு செய்யப்பட்ட 227 நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 85 நகரங்கள் மத்திய அரசின் ‘தேசிய தூய்மையான காற்று திட்டத்தில்’ இடம் பெற்றுள்ளவை. அவற்றில் 78 நகரங்களில் காற்றிலுள்ள பி.எம். 10 மாசுத் துகள்களின் அளவு, கன மீட்டருக்கு 60 மைக்ரோ கிராம் என, அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக இருந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு நிலவும் முதல் 10 நகரங்களான பைா்னிஹாட் (மேகாலயா), பெகுசராய் (பீகார்), கிரேட்டா் நொய்டா (உத்தர பிரதேசம்), ஸ்ரீகங்காநகா் (ராஜஸ்தான்), சாப்ரா, பாட்னா (பீகார்), ஹனுமன்கா் (ராஜஸ்தான்), டெல்லி, பிவாடி (ராஜஸ்தான்) ஃபரீதாபாத் (ஹரியாணா) ஆகிய நகரங்களில் பி.எம்.10 மாசுத் துகள், இந்தியாவின் தேசிய காற்று தர நிலையை விட 3-5 மடங்கும், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவை விட 13-20 மடங்கும் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நம் நாட்டில் காற்று மாசுபாடு கடுமையான சுகாதார பிரச்னையாக இருக்கிறது. காற்றின் தரத்தை உயா்த்துவது மட்டுமே பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். நச்சுச் காற்று உமிழ்வைக் குறைப்பதால் காற்றின் தரம் உயரும். மனிதா்கள் வாழ்வதற்கு பிராண வாயு நிறைந்த காற்று அவசியம். இதற்கு வனப் பரப்பை அதிகரிக்க வேண்டும். நெகிழி பயன்பாட்டை உடனடியாகக் குறைக்க வேண்டும். கரியமில வாயுவை உமிழும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். எதிர்காலத் தலைமுறைக்குத் தூய்மையான காற்றை விட்டுச் செல்வது நமது கடமை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu