ஒரிசா ரயில் விபத்து: 7 பிரிவுகளில் எப்ஐஆர் பதிவு
பைல் படம்.
ஒரிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் நிலைய பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 255 பேர் உயிரிழந்தனர். 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகளுடன் அந்த பகுதியிலேயே தங்கியிருந்து சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், நேற்றிரவு இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். உயிரிழந்தவர்களுக்கு மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன.
ரயில்வே துறையின் வளர்ச்சிக்கு முறையான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்டாக் ரயில்வே காவல்துறையின் உதவி ஆய்வாளர் பப்பு குமார் நாயக் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் பிரிவு 337, 338, 304 A, 34 மற்றும் ரயில்வே சட்டம் 153, 154, 175 ஆகிய பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu