Morarji Desai-நேர்மைக்கு பேர் போன மொரார்ஜி தேசாய் காலமான நாளின்று!

Morarji Desai-நேர்மைக்கு பேர் போன மொரார்ஜி தேசாய் காலமான நாளின்று!
X
காங்கிரஸ் கட்சியை முதன்முதலாக கூப்பில் அமர வைத்து, ஜனதா கட்சி சார்பாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய்

மொரார்ஜி தேசாய் பிறந்த இடம் வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், வளர்ந்த இடம் கூட வளம் இல்லாமல் சராசரியாக இருக்கலாம். ஆனால், அவரின் நேர்மை இன்றளவும் இந்திய அரசியல்வாதிகளிடம் இருக்கிறதா என்றால் அதற்கு நம்மிடம் சரியான பதில் இருக்காது. ஆம், நேர்மையின் மறு உருவம் அவர், அவர் வேறு யாரும் அல்ல காங்கிரஸ் கட்சியை முதன்முதலாக கூப்பில் அமர வைத்து, ஜனதா கட்சி சார்பாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய்தான் அவர்.

நேர்மையை அவரிடம் பிரதானப்படுத்த என்ன இருக்கிறது என்று கூட சிலர் கேட்கலாம், அதற்கு வலிமையான காரணம் இருக்கிறது. முன்பு ஒருமுறை அவர் பம்பாய் மாகாணத்தின் அமைச்சராக இருந்தபோது, அவரின் மகள் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தார். ஒரு பாடத்தில் அவர் தோல்வி அடையவே, அவரின் மகள் மீண்டும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க தயாரானார். இதற்காக தன் தந்தையிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் உடனடியாக மறுத்துவிட்டார். தான் அமைச்சராக இருப்பதால் மகளுக்கு சலுகை காட்ட வாய்ப்பிருப்பதாக அடுத்தவர்கள் நினைப்பார்கள் என்று கூறி மகளின் கோரிக்கையை நிராகரித்தார். இதனால் வருத்தமடைந்த அவரின் மகள் தற்கொலை செய்துகொண்டார். தேசாயின் நேர்மைக்கு இது ஒன்றே போதுமான சாட்சியாக இருக்கும்.

அவர் பிரதமராக இருந்த அந்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றினார். இன்றைக்கு குறைந்த விலையில் உணவு என்று எல்லா மாநிலங்களும் போட்டி போட்டுக்கொண்டு திட்டங்களை அறிவிப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் தேசாய் என்றால் அது மிகையல்ல. ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு என்ற திட்டத்தை அவர் கொண்டு வந்தார். அப்படி சாப்பாடு தர முடியாத ஓட்டல்களுக்கு அங்கீகாரம் தர முடியாது என்று அறிவித்தார்.

தங்கத்தின் விலையைக் குறைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். வரதட்சணை என்ற வார்த்தையே அவருக்குப் பிடிக்காது. தான் கலந்துகொள்ளும் திருமணங்களில் வரதட்தணை கொடுக்கப்பட்டதாக தகவல் தெரிந்தாலே அந்த திருமணத்துக்கு செல்லாமல் தவிர்த்துவிடுவாராம். ஒருமுறை அவர் தமிழகம் வந்தபோது ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்ய முடிவெடுத்து சென்றுள்ளார்.

5 ரூபாய் கட்டணம் கட்டி வரிசையில் நின்றே அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். தன்னுடைய பதவியை தனக்கான லாப நோக்கத்திற்காக அவர் எப்போதும் பயன்படுத்தியதில்லை. இதனால்தான் என்னவோ நம்முடைய எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட, அந்நாட்டின் மிக உரிய விருதான நிஷான்- இ - பாகிஸ்தான் விருதினை அவருக்கு அளித்து கவுரவப்படுத்தியுள்ளது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் பெற்றிருக்கிறார்.

இதைவிட அவருக்கு வேறு ஒரு சிறப்பு இருக்கிறது. அவர் தன்னுடைய பிறந்தநாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கொண்டாடுவார். ஏனென்றால் அவர் பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்தவர். தன்னுடைய 98 வயது வாழ்க்கையில் 25 முறை கூட அவர் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தால் என்ன, அவர் சாதனைகள் இன்றளவும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறதே! இன்று அவரின் நினைவு நாள் என்பது கூடுதல் சிறப்பு.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself