பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முடிவு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை நமது எரிபொருள் தேவைக்கு வெளிநாடுகளை தான் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. நமது தேவையில் 75 சதவீதத்தை இறக்குமதி தான் செய்கிறோம். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உச்சத்தை தொட்டநிலையில் தான் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அதனை சார்ந்த அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி எதிரொலியால், பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு 10 ரூபாய் வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருவதால் அதன் காரணமாகவும் இந்த அதிரடி விலை குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனால் பெட்ரோல் ,டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற உச்சத்தைத் தொட்டது. ஆனால், அப்போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.00 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக உயர்ந்து கொண்டே தான் சென்றது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை என்ன உள்ளதோ அதை பொறுத்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை. 10 பைசா 20 பைசா என்ற அளவில் தான் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 77.5 டாலர் என்ற அளவில் இப்போது உள்ளது. அதுமட்டுமல்ல கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவை மட்டுமே சந்தித்து வரும் சூழலில் கூட பெட்ரோல், டீசல் விலை குறையாததால் வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள் இது தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர். இந்நிலையால் தான் இப்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு லாபம் கிடைக்கச் செய்யும் விதமாக லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கடந்த தீபாவளி பண்டிகையின் போது பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் ஆங்கில புது வருட பிறப்பான 2024ம் ஆண்டு புத்தாண்டு அறிவிப்பாக விலை குறைப்பு அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. இந்த நிலையில் தான் தற்போது உறுதியாக விலை குறைப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது உடனடியாக இல்லை என்றாலும் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் தொடர்பான அதிகாரரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னதாக கட்டாயம் விலை குறைப்பு அறிவிப்பு வந்தே தீரும் என்பது தான் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags

Next Story